Wednesday, 22 July 2015


வெள்ளியங்கிரி மலை மீதுலாவினோம்  

1 
--------------------------------------------------------------------------------------------------------------------          

நடைபயணங்களும்   மலைமீது ஏறுவதும் நமக்கு புதிதல்ல! 
ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்வரை வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ மலை மீது ஒரு குழுவாக நமது அன்பிற்கினிய சிவக்குமார் தலைமையில் ஏறுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அவையெல்லாம் தாவரவியல் பயணங்கள்! சராசரியான நபர்களுக்கு சலிப்பூட்டும் பயணங்கள். 
        ஆனால் ஒரு ஆண்மீக பயனம் குறிப்பாக மலை மீது ஏறும் ஆண்மீக பயனம் (சபரி மலை, கைலாஷ் யாத்ரா, நரசிம்மர் குகை) அப்படியல்ல! நினைத்தவுடன் செல்ல முடியாது! கடுமையான விரதங்களும் தேவை. 

       இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தங்கவேல் சார் வெள்ளியங்கிரி சென்றபோதே கூப்பிட்டார், கூப்பிட்டுக்கொண்டிருந்தார், பல்வேறு சாக்கு போக்குகளை கூறி இரண்டுவருடமாக தள்ளிவைத்த பயணம் இம்முறை முடிவானது. விரதமெல்லாம் வேண்டாம், காலையில் மறக்காமல் வாங்கிங் மட்டும் செல்லவேண்டும் என்று கூறிவிட்டார். 
       நாம் வழக்கம்போல அதை காற்றில் பறக்கவிட்டு நித்திய சுகவாசியாக இருந்தோம். பிறகு பயனத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கவேண்டும் என கூறி குளுக்கோஸ், பழங்கள், வாலினி ஸ்ப்ரே, மாத்திரைகள், கால் முட்டிக்கு க்நீ பேண்ட் ஆகைவற்றை வாங்கினோம். க்நீ பேண்ட் மற்றும் வாலினி மருந்தினை பார்த்த உடனே பதற்றம் அடைந்தேன். விஷயம் அவ்வளவு எளிதானது அல்ல என புரிந்தது.  

        அந்த நாள் வந்தது. 17.04.2015 அன்று காலை கிளம்பி, மாலை ஈஷா மையத்தினை அடைவது. பின் இரவு மலையேற தொடங்கி மறுநாள் இறங்குவது. இது தான் பயணத் திட்டம்.
           17ஆம் தேதி காலை டீம் லீடர் சுப்ரமணியன் சார் கூப்பிட்டு 1.30 மணிக்கு வண்டி புறப்படும் என கூறினார். நான் 10 மணிக்கே தயாராக இருந்தேன். தங்கவேல் சார் பரமத்தியில் ஏறுவதாக திட்டம்.
       சரியாக ஒரு மணிக்கு சுப்பரமணியம் சாருக்கு போன் செய்து எங்கு வரவேண்டும் என கேட்டேன். அவர் நாமக்கல் ஈஷா மையத்தில் வண்டி வந்து விட்ட்து நீங்கள் வீட்டிற்கு அருகில் ஏறிக் கொள்ளலாம் என்றார். மேலும் வண்டி கிளம்பும் போது நான் சொல்கிறேன் பிறகு வந்தால் போதுமென்றார்.
           மணி 1.30 ”சார் வண்டி கிளம்பியாசா?”
      “இல்ல மகேஷ் இன்னும் 10 நிமிசத்தில் கிளம்பியிருவோம், போன் பன்றேன்”
          மணி 1.45 மீண்டும் ”சார் வண்டி கிளம்பியாசா?”
     “அவ்வளவுதான் இன்னும் 20 நிமிசத்தில் கிளம்பியிருவோம், போன் பன்றேன்”
          மணி 2.00 “சார் இன்னுமா கிளம்பல??” மீண்டும் அவ்வளவு தான் என்றார்.
     மணி 2.30 “ சார் நா வேனுமுனா நம்ம செண்டருக்கு வந்திரவா??” “ தேவையில்ல இருந்தாலும் வாங்க”என்றார்
    சட்டெனெ உறைத்தது “ ஆகா இது இண்டியன் டைம்ல கிளம்புற பயணம்போல”
       ஏனெனில் உலகில் அனைத்து கடிகாரங்களும் நேரத்தினை அடிப்படையாக கொண்டவை. இந்திய கடிகாரம் மட்டும் நம்பிக்கையினை அடிப்படையாக கொண்டது. திருவருள் கூட்டுவிக்கும்போது தானாக நேரம் வரும். மேலும் ஈஷாவில் ஒரு வகுப்பு மட்டுமே கலந்து கொண்டதால், நேர விஷயத்தில் சற்று பிடிவாதமாக இருந்தேன்.
     ஏற்பாட்டாளர்கள் ஈஷாவில் பல வகுப்புகள சந்தித்து இந்திய நேரத்தில் செயல்படும் பேறு பெற்றனர்.
    2.45க்கு செண்டரில் இருந்தேன். புறப்படுவதற்கான எவ்வித அறிகுறியும் இன்றி எண்ணி 5 பேர் வட்டமாக அமர்ந்திருந்தனர். நான் வட்டத்திற்கு சற்று வெளியே அமர்ந்தேன்.
      ஆற அமர தேங்காய்க்கு துணி சுற்றிக்கொண்டிருந்த சுப்பரமணியம் சாரிடம் “ சார் வண்டி கிளம்ப லேட்டாகுமா? என்றேன்” ”இல்ல மகேஷ், வரகூரிலிருந்து ஒருத்தர் வர்ரார், அவருக்கு தகவல் கிடைக்கல, வந்த உடன் கிளம்பலாம்” என்றார்.
   ’சார் மொத்தம் அப்ப 7 பேர்தானா? ’ என்றேன். 
  ’இல்ல 21 பேர்’ என்றார். பீதியடைந்தேன்
 ‘ அவங்கெல்லாம் எங்க சார் ஏறுவாங்க’ ,என்றேன்.
  சுப்ரமணியம் சார் தனது ஒரு மண்டல சாதனையான கருந்தாடியினை நீவிவிட்டு மென்மையாக சிரித்தார். எனக்கு பாத்ரூம் போக வேண்டுமென
தோன்றியது.

 


2
-------------------------------------------------------------------------------------------------------------------------    

பிறகு 3 மணிக்கு நண்பர் தனசேகரன் வந்தார். ஒரளவு கூட்டம் கூடியதும், வெகு நேரமாக வெயிலில் நிற்கும் வண்டியில் பையை வைக்கலாம் என்று எண்ணி பிறகு வண்டி கிளம்பும் போது செல்லலாம் என விட்டுவிட்டேன்.

சரியாக 3.30 மணிக்கு கிளம்பலாம் என்றார்கள்.
ஈஷாவின் மேலுல்ல நம்பிக்கையால் சீட் போடவில்லை விளைவு கடைசி சீட்டில் கடைசி இடம் கிடைத்து.
நான் செண்டரில் உட்கார்ந்திருந்த நேரத்தில் கிடைத்த பொருளை வைத்து நண்பர்கள் சீட் பிடித்திருந்தனர்.
எனக்கு நமது பண்பாடு மற்றும் கலச்சாரத்தின் மேலுல்ல நம்பிக்கை மேலும் திடமானது. வண்டி உறுமியது, பல்லை பிடுங்குவது போல ஆக்ஸிலேட்டரை ட்ரைவர் பதம்பார்த்து கொண்டிருந்தார்.
சுப்ரமணியம் சார் பதறினார், “ வண்டிய நிறுத்தப்பா, இண்ணும் 2 ஆள் வரனும்” என்றார்
”எங்க சார் போய்டாங்க, போன போடுங்க’ என்றார் ஒருவர்.
ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாட்ட சாட்டமான இரு இளைஞர்கள் வந்து சேர்ந்தனர்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் கருப்பண்ணனிடம் ஐபோனை நோண்டியபடி “அப்படி ஒன்னும் லேட்டாகல” என்றார்கள்.
கண்ணை மூடி தூங்க முயற்சித்தேன்.
பரமத்தியில் தங்கவேல் சார் மேலும் இருவரை கூட்டிக்கொண்டு ஏறினார். அவர் முன் சீட்டில் உட்கார்ந்துகொள்ள நான் மீண்டும் தூங்க முயற்சித்தேன்.

பலவித குழப்பமான கனவுகள், வண்டி அசுர வேகத்தில் போவதாக தோன்றியது. கண் திறந்து பார்த்தால் அப்போதுதான் வேலாயுதம்பாளையத்தினை வண்டி தாண்டியது.
     வண்டி கோவை தாண்டும் போது மேகம் இருட்டிக்கொண்டு மின்னலை இறக்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தூறல் பெரிதாகி மழை கண்ணாடி சன்னலில் மோதி வழிந்தது. “ மழை பெய்தால் ஏறமுடியாது. அடிவாரத்துடன் திரும்பவேண்டியதுதான் “ என்றார்கள். மேலும் பாதி மலை ஏறி மழையில் மாட்டிகொண்டவர்கள் 2 நாட்கள் அப்படியே அசையாமல் இருந்து பின் மீண்டு வந்தததையும் தெரிவித்தனர். ஒரு 20 கி.மீ தாண்டியபின் மழை இல்லை ஆனால் பின்னால் துறத்திக்கொண்டு வருவது போல குளிர்காற்று வீசியது.
         பேரூர் தாண்டி ஒரு பேக்கரியில் பிரட்பாக்கெட்டுகள் வாங்கப்பட்டது. எதற்கு என்றேன். நாளைக்கு சாப்பிட என்றனர். ஒரு வழியாக 7 மணிக்கு வண்டி ஈஷா மையத்தினை அடைந்தது.
           எப்போது சென்றாலும் புதிய கட்டமைப்பில் இருப்பது ஈஷாவின் சிறப்பு. 4 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறேன் ,நிறைய மாற்றங்கள்.
        தங்கவேல் சார் தீர்த்த குண்டத்தில் குளிப்பதற்கான சீட்டுகளை வாங்கி வந்தார். முதலில் ஒரு பொது குளியறையில் குளித்த பின்புதான் சிறிய குளம் போன்ற சூரிய குண்ட்த்தில் இறங்க முடியும்.
      பொது குளியலறை என்பது தமிழ்நாட்டிற்கு புதிது. ஆம் ,பொது குளியலறை என்ற உடனே ஏதோ பஸ் நிலையத்தில் இருக்கும் முடை நாற்றமடிக்கும் பாத் ரூம்களை சொல்லவில்லை இது வேறு வகையான குளியல் அறைகள். பாத் ஹவுஸ் எனும் குளியல் இல்லங்கள் ஒரு சமூகத்தில் உச்சகட்ட நாகரீகத்தின் அடையாளங்கள். பண்டைய மொகஞ்சதாரோ , கிரீஸ் ஆகிய இடங்களில் மிக செழிப்பாக இக்கலாச்சாரம் பேனப்பட்டது.
         என் உடைகளை கழற்றி காவி உடை அனிந்து பின் ஷவரில் நெடு நேரம் குளித்தேன். தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. என் உடலில் எதையோ கழுவி அழிக்க முயற்சித்து பின் தோற்று ஓடியது நீர்.

        சூரிய குண்டத்தில் மிக சொற்பமானவர்களே இருந்தனர். சுற்றிலும் செம்புத் தகடுகளை பதித்த தொட்டியில் 40 அடி உயரத்தில் கொட்டும் தண்ணீர் சூழலை மேலும் குளுமையாக்கியது. படிகளில் இறங்க இறங்க நீர் ஏறியது. நெஞ்சு வரை தன்னீரில் மூழ்கிய போது ஒர் விநாடி மின்சாரம் தாக்கி பின் குளிர்ந்து விரைத்து சூடேறியது உடல்.

         குளத்தின் நடுவே 3 ரச லிங்கங்கள். ஒரு நடுத்தர வயது தடித்த ஆசாமி காதலியை தழுவது போல லிங்கத்தினை கட்டித் தழுவிக்கொண்டிருந்தார். அவருக்கு பின் அதே போல செய்ய மேலும் இருவர் காத்துக் கிடந்தனர். மெல்ல விலகி நீருக்குள் நடக்க முயற்சித்து மூழ்கி பின் பதறி எழுந்து நீர் கொட்டும் இட்த்திற்கு சென்றேன். உருட்டுக்கட்டையால் தாக்குவது போல நீர் முதுகில் அறைந்தது. முடிந்த வரை தாக்குபிடித்தபின் நகர்ந்து 3வது லிங்கத்தினை கட்டித் தழுவி படியேறினேன்.

       குளத்திற்கு மேலே வெட்ட வெளியில் திரளான பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இதையெல்லாம் பார்லிமெண்ட் மாடத்தில் இருந்து சபை நடவடிக்கைகளை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருந்தனர்.

     வளாகத்தின் மற்றொரு கோடியில் மலையேற்றத்திற்கு உதவுவதற்காக மூங்கில் கழிகள் விற்றுக்கொண்டிருந்தனர்.
தரையில் இறைந்து கடந்த மூங்கிலை ஏழெட்டுபேர் புதையலை தேடுவதுபோல கலைத்து கலைத்து எடுத்து கொண்டிருந்தனர். சட்டென ஒன்றை எடுத்தேன். தேடிக்கொண்டிருந்தவர்கள் நான் எடுத்த கழியினை ஒரு கண நேரத்தில் தாங்கள் எடுத்த கழியுடன் வாயு வேக மனோ வேகத்தில் பொருத்தி பார்த்துவிட்டு நிம்மதியடைந்து பின் மீண்டும் கோழி கிளறுவது போல கழியினை தேடிக்கொண்டிருந்தார்கள். எடுத்த குச்சி சற்று வளைந்திருந்த்து. மேற்கொண்டு தேட தோனவில்லை. தங்கவேல் சார் எனக்காக தேட தொடங்கினார். ஒரு நீண்ட குச்சியினை எடுத்துக் கொடுத்தார். தக்கன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்கள் இங்கே குச்சியாக கிடக்கின்றார்கள் என விளக்கினார். வெள்ளியங்கிரி மலைமேல் ஏறினால்தான் இவர்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தங்கவேல் சார்.
மூங்கில் காய்ந்து வென்கல நிறத்தில் உறுதியாக இருந்தது. வாஞ்சையுடன் குச்சியினை தடவினேன். மலையேறி இறங்கும் வரை இதுவே வழித்துணை என்ற எண்ணமே குச்சியின் மேல் மரியாதை தோன்றியது. யதேச்சையாக கணுக்களை என்ணிப்பார்த்தேன். சரியாக 7 இருந்தது. மிதித்தும் வளைத்தும் கிளறியும் தட்டிப்பார்த்தும் கூட்டம் இன்னமும் குச்சியை தேடிக்கொண்டிருந்தது. பல்லாயிரம் ஆண்டு கடந்தாலும் தக்கன்யாகத்திற்கு சென்ற பலனை குச்சியாய் கிடந்த முனிபுங்கவர்கள் அனுபவத்துக்கொண்டிருந்தனர்.


3
-----------------------------------------------------------------------------------------------------------------------

இரவு 8.30 எவ்வளவு குறைவாக சாப்பிடமுடியுமோ அவ்வளவு குறைவாக சாப்பிட்டோம். குளிர்ந்த மழைக்காற்றுடன் அவ்வப்போது மின்னல் தோன்றிக்கொண்டிருந்த்து. இரவு மலையேறுவது ஏறக்குறைய சாத்தியமில்லை என தோன்றியது. காலை 4 மணிக்கு ஏறுவதாக முடிவாகியது. நானும் தங்கவேல் சார் எது நடந்தாலும் சரி இரவு எப்படியும் ஏறுவது என முன் முடிவோடு இருந்தோம். மேலும் மலை மேல் சூரிய உதயத்தினை காண்பது எங்கள் பயனத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே எங்கள் பக்கம் ஆட்களை திரட்ட தொடங்கினோம்.
       ஒரு வழியாக அனைவரும் இரவு ஏறிவிடலாம் என முடிவு செய்தனர் 9.30க்கு வண்டி கிளம்பி 10 மணிக்கு அடிவாரத்தினை அடைந்தோம். அடிவாரத்தில் வனத்துறையின் சோதனைசாவடியில் மலையேறும் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
   கஞ்சா கடத்தும் கும்பலை சோதிப்பது போல எங்கள் பையை கொட்டி சோதித்தனர். ’ஒரு துண்டு பிளாஸ்டிக் கூட மேல போக்கூடாது சார்’ என சோதனை போடும் பையன் விளக்கினான்.
 பிஸ்கட் பாக்கெட்டினை பிரித்து பிஸ்கட்டை பேப்பரில் போட்டலம் மடித்து கொடுத்தனர், போலோ மிட்டாய் கவர், குளுக்கோஸ் பாக்கெட், உலர் திராட்சை கவர், ஜவுளி கேரி பேக் என அனைத்தும் நிராயுத பாணியாக உறுவியெடுத்து குப்பையில் சேர்த்தார்கள். பிளாஸ்டிக்கால் ஆன பல்துலக்கும் பிரஷ் மற்றும் எனது பைபர் கிளாஸ் கண்ணாடி ஆகிய பிளாஸ்டிக் மட்டும் சற்று பெரிய மனது வைத்து விடுவித்தனர். ’தம்பி கொஞ்சம் பாத்து செய்யப்பா’ என கேட்டவரிடம் கேமராவில அதிகாரி பாத்துகிட்டிருக்கார் சார் என கூறினான்.
    முன்கூட்டியே மலையேறும் போது எடுத்துசெல்லும் பை எவ்வளவுகளவு சிறியதாக இருகிறதோ அந்த அளவில் பயனம் சுகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இருந்தும் எனது தோள் பையில் பின்வரும் பொருட்கள் இருந்த்து.
    பழங்கள் 2 கிலோ, உலர் திராட்சை பிஸ்கட் 1 கிலோ, DSLRகாமிரா 3.5 கிலோ, லென்ஸ் 1 கிலோ, ஆடைகள் 1 கிலோ, பாதி மலையேறி பின் போட்டுக்கொள்வதற்காக செருப்பு 5 கிலோ, பிற சில்லரை சாமான்கள் சேர்த்தால் 15 கிலோ தேறும். குச்சி மற்றும் டார்ச் லைட் தனி.
      உடன் வந்த பக்த கோடிகள் எனது பேக்கின் அளவைப் பார்த்து “சார் அங்கியே ரெண்டு நாள் தங்கிட்டு வாரீகளா “ என கேட்டு பீதி ஏற்படுத்தினர்.
    முதல்படியில் சூடம் ஏற்றப்பட்டு சாமி கும்பிட்டு ஏற ஆரம்பித்தோம். சில்லென்ற குளிர் காற்று பக்த கோடிகளின் அரோகரா, கோயிலில் ஒலித்த பாடல் என கலவையான சூழலில் மேல் நோக்கி நடந்தோம்.
   ஒரு கையில் குச்சி, மறு கையில் பாட்டரி லைட் முதுகில் தோள் பை. வித்தியாசமான கெட்டப். படிகள் ஏற ஏற குழு சிதறியது. இறுதியில் நானும் தங்கவேல் சார் மட்டும் ஓரிணையாக ஏறிக்கொண்டிருந்தோம்.
   படிகள் ஆங்காங்கு பெயர்ந்து இருந்த்து, சில இடங்களில் கல் உருண்டு ஓடியது எச்சரிகையாக ஏறினோம். கால்களில் கல் குத்தியது. பிறகு பேக்கில் இருந்து செருப்பினை எடுத்து போட்டுக்கொண்டேன்.
    ஒரு 2000 படி ஏறியிருப்போம், எனது கால்கள் இறுகிக் கொண்டது போல உணர்வு, தலையிலிருந்து வியர்வை கொட்டியது, பாம்பின் சீற்றம் போல மூச்சு, நா வறட்சி. அப்படியே உட்கார்ந்தேன் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. குளுக்கோஸை பிரித்து அப்படியே வாயில் கொட்டினேன்.
       “சார் முத மலையில பாதி ஏறியிருப்பாமா?” என கேட்டேன்.
        பரிதாபமாக பார்த்தார். “சார் முடியல, நீங்க வேனுமுனா போயிட்டு வாங்க, நா இப்டியே கிழே எறங்கிக்கிறேன்”
    ” ஒன்னும் இல்ல , கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ,ஏறிடலாம்” என நம்பிக்கையூட்டினார்.
      “ சார் இந்த செருப்புதான் பிரச்சனை, இத கழட்டி வைச்சிட்டு நடக்கிறேன்” 
     “அப்ப இத தூக்கீட்டு ஏறப்போறிங்களா, பேசாம இந்த மரத்துக்கு பின்னாடி வெச்சிருங்க, வரப்ப்ப எடுத்துகிலாம்” என்றார்
    ” சார் இது உட்லேண்ட்ஸ் செருப்பு மூவாயிரம் சார்” என பதறினேன். என்னையும் செருப்பையும் ஒரு மாதிரியாக பார்த்தார்.
   ‘ மகேஷ் நீங்க ஏறவேண்டியது ஒரு படி மட்டுமே. வேறெதையும் நினைக்காதீங்க. ஒரு படி. ஒவ்வொரு படி, மெல்ல ஏறுங்க” என உற்சாகப்படுத்தினார். எழுந்து தயாரானேன்.
    வாலினி ஸ்பிரே கால் முழுவதும் அடித்துகொண்டேன். அதன் மனம் பரிச்சியமாக இருந்த்து. ஆகா! சில நாட்களுக்கு முன் ஆபிஸில் என்னை பார்க்க வந்தவரிடம் “உங்க பாடிஸ்பிரே பயங்கர நெடியுடன் வித்தியாமா இருக்கே, என்ன பிராண்ட் “ என கேட்டதும் அதற்கு அவர் நமுட்டு சிரிப்பு சிரித்த்தும் நினைவிற்கு வந்த்து. அட பாவி இந்த வாலினி ஸ்பிரேதான் அடிச்சிருந்தானா???

  இனி எங்கும் உட்காரக்கூடாது என முடிவெடுத்தேன். ஆம் மலையேரும்போது சோர்வு தோன்றினால் சற்று நிற்கலாம். ஒருபோதும் உட்காரக்கூடாது. (எஞ்சின் ஓடிக்கிட்டே இருக்கனும். நின்னா சீஸ் ஆகிடும்)
  மேலும் ஆயிரம் படிகள். கீழே கோவை நகரம் மின்னொளியில் மின்னியது. ஆம் அப்போதுதான் அதை உணர்ந்தேன். மலையில் எந்த இடத்தின் இருந்து பார்த்தாலும் தரை தெரிகிறது. அப்படியென்றால், மலை மிக செங்குத்தாக இருக்கிறது. ஒரு வேளை இது பகலாக இருந்தால் நமது பாதையின் இரு புறமும் அபாயமாக சரிந்து இறங்கும் பள்ளத்தாக்கை காணலாம் என்றார் தங்கவேல் சார். மேலும் நடந்தேன். இப்போது எனது கால்கள் நன்கு பழகிவிட்டது. ஆச்சரியம் சோர்வும் இல்லை. நடந்து கொண்டே இருந்தோம்.
   ” சார் முதல் மலையே இன்னும் முடியலயா?”, “ அவ்வளவு தான் பாதி தூரம் வந்து விட்டோம்”
   “ என்னது பாதி தூரமா???” உலர் திராட்சையை கொத்தாக வாயில் போட்டு தண்ணீர் குடித்தேன். மீண்டும் நடந்தோம்.
   ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு பாதை மேலும் செங்குத்தாக மாறியது. தலைக்கு மேல் பாதை இருப்பதாக தோன்றியது.
   கற்கள் அனேகமாக பெயர்ந்து இருந்த்து.கற்கள் பெயர்ந்த இடத்தில் குச்சியை ஊன்றி அழுத்தி பிறகு காலெடுத்து மெல்ல மெல்ல முன்னேறினோம். சில நேரங்களில் ஒரே கையில் குச்ச்சியினையும் பேட்டரி லைட்டையும் பிடித்துக் கொண்டு மற்றோரு கையை பாறையில் ஊண்றி செல்ல வேண்டியிருந்தது. சிறிது நேரம் கழித்து பேச்சு சத்தம் அதிகமானது. மேலும் ஏற ஏற விளக்கு வெளிச்சம் தெரிந்த்து.
 முதல் மலை முடிவிற்கு வந்தது.
  முதல் மலையில் சிறிய அளவிலான பிள்ளையார் கோவில் இருந்த்து. இதனை வெள்ளைப் பிள்ளையார் கோவில் என்கிறார்கள். காலத்தால் மிகவும் பிந்தியது. 6 மற்றும் 7 வது மலையில் வெள்ளை நிற சுண்ணாம்பு படிவ கற்கள் கிடைக்கின்றன. ஒருவேளை இக்கல்லை வைத்து இப்பிள்ளையார் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
    கோவில் அருகே ஒரு வெட்ட வெளி மண்டபத்தில் பிரசவ வார்டில் இருப்பது போல 20 ஆண் சிங்கங்கள் ஆயாசமாக படுத்தும் உருண்டும் நெளிந்தும் கிடந்தன. ”என்னைப் போல் ஒருவன்” சாதரனமான டைட்டில் அல்ல என நினைத்துக்கொண்டேன்.
   கோவிலை ஒட்டிய கடையில் விற்பனை சிறப்பாக இருந்த்து. சுக்கு காபி, வெள்ளரி, சர்பத், மிராண்டா வகைகள், வாழைப்பழம் என அனைத்தும் கிடைத்தது.
  காலிப்பயல்கள் ஆங்காங்கு புகை விட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் உட்காரவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி எங்கும் உட்காரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சற்று நேரம் நின்றுகொண்டிருந்தோம். ‘ இனிமேல சிரம்மில்லை, 2வது மலை கொஞ்சம் ஈசியாகவே இருக்கும் என்றார் தங்கவேல் சார்.
  வழி எங்க சார் என்றேன். அங்கே என்றார்.. பாதை இருண்டு கிடந்த்து. அமாவாசை இருட்டில் பால் வெளி மண்டலம் தலைக்கு நேர்மேலே வந்துகொண்டிருந்தது. காமிராவை எடுத்து பல்ப் டைம் செட் செய்து பால்வெளி மண்டலத்தினை போட்டோ எடுக்கலாமா என யோசித்தேன். கைகள் நடுங்கிகொண்டிருந்த்து. படம் நிச்சயம் நன்றாக வராது. தோள் பையை நன்கு இருக்கிக்கட்டி, தண்ணீர் குடித்து, திரும்பி புன்னகைத்து “போலாம் சார்” என்றேன். ஒரு முனிவர் போல “ஆம் அவ்வாறே ஆகுக” என்றார்.. இரண்டாவது மலையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.  


 4
----------------------------------------------------------------------------------------------------------------------

இரண்டாவது மலை ஒரு திறந்த சமவெளிபகுதி போல நீண்டு சென்று கொண்டிருந்தது.
 சிக்காடா எனும் சில்வண்டின் ரீங்காரம் அடர்த்தியாக கேட்டுக்கொண்டிருந்தது. மரங்களின் அடர்வு ஆங்காங்கே சற்று குறைந்திருந்தது.
 வளைந்து திரும்பிய பாதையில் ஒரு பருத்த மரம் வேருடன் வீழ்ந்து கிடந்தது. ஒரு காம்பெளண்டு சுவரை தாண்டுவது போல மெல்ல ஏறி மரத்தினை தாண்டினோம். பாதை சரேலென கீழிரங்கி பின் மெதுவாக மேலேறிய ஒரு பெரிய பாறையின் அடியில் கொண்டுவிட்டது.
 அதுதான் வழுக்குப்பாறை, பெயருக்கேற்றார்போல எவ்வித பிடிமானமின்றி உருட்டிவைத்த உருண்டையாக பாறை இருந்தது. நல்லவேளையாக படிகளை வெட்டிவைத்திருந்தனர். 1970க்கு முன்பு படிகள் இல்லை எனவே பாறை உச்சியிலிருந்து தொங்கும் கயிறு மற்றும் இரும்பு சங்கிலியினை பிடித்தபடி பக்த கோடிகள் ஏறுவார்களாம். பெயர்தான் வழுக்குப்பாறையே தவிர அது பாறையல்ல ஒரு குட்டி மலை. நடக்க நடக்க சென்று கொண்டே இருந்தது. ஒரு 20 நிமிட பயணத்திற்கு பிறகு மீண்டும் செங்குத்தாக மேல் நோக்கிய படிகள் முதல் மலையினை நினைவுபடுத்தியது. படிகள் படிகளாக இல்லாமல் கரடு முரடான கற்களை மேல் நோக்கி அடுக்கியதுபோல இருந்த்து. நெஞ்சுவரை கால் மடக்கி குச்சியை பள்ளத்தில் ஊண்றி கைபிடித்து மெல்ல ஏறிக்கொண்டிருந்தோம்.
 சோர்வின் உச்சத்தில் இடுப்பில் கையூண்றி ஆயாசமாக டார்ச்சை மேல்நோக்கி அடித்து பாதையை பார்க்கும் வேளையில் தங்கவேல் சார் “ இன்னும் ஒரு படி மட்டுமே, அந்த எண்ணத்துடன் ஏறுங்கள்” என அசராமல் கூறுவார். ஒருமணி நேரபயணம், பாதை இன்னும் செங்குத்தாகவே ஏறியது. கூடுதலாக இருபுறமும் நல்ல அடர்ந்த மரங்கள்.
  வெகு தூரத்திலிருந்து ஒரு தீனமான ஒலி விட்டு விட்டு வந்தது. பிறகு ஏற ஏற சப்தம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அடித்தொண்டையிலிருது விக்கல் எடுப்பது போலவும் பிளிறுவது போலவும் ஒலி, மிக சப்தமாக, வெகு அருகில். டார்ச்சை அனைத்து அப்படியே நின்றோம்.
  துணைக்கு வேறு எவரேனும் கீழிருந்து வருகிறார்களா என காத்திருந்தோம். யாரும் வரவில்லை. அது பறவையின் ஒலியில்லை ஏனெனில் சப்தம் தரையிலிருந்தே வந்தது. நிச்சயமாக ஏதேனும் பாலுட்டியாக இருக்கலாம். நான் அது யானையாக இருக்கும் என அனுமானித்தேன். நல்லவேளையாக காற்று எங்களுக்கு எதிர் திசையில் இருந்து வந்தது. எனவே எந்த மிருகமாக இருந்தாலும் எங்களை கண்டுபிடிப்பது சிரமமே. பிறகு எந்த அளவில் வேகமாக செல்லமுடியுமோ அந்த அளவில் வேகமாகவும் ஓசைப்படாமலும் நடந்தோம். ஒலி கூடவே வருவது போல பிரமை.
 மேலிருந்து விளக்கின் வெளிச்சம், சப்தமான தெளிவற்ற பேச்சு சப்தங்கள். டார்ச்சை அடித்தேன். ஒரு குடிசையும் அதன் அருகில் பாம்பாட்டி சுனை என்ற பலகையும் தென்பட்டது. வெற்றிகரமாக இரண்டாவது மலையினையும் கடந்து விட்டோம். கடையில் சுக்குகாபி சாப்பிட்டபடி “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பெரிய சத்தம் வந்ததே, யானையா?” என்றேன். கடையிலிருந்தவர் பதற்றமாக ’இல்லை மான்’ என்றார். நான் நம்பவில்லை என்பதை புரிந்து கொண்டார்.
 ஆம் யானைகள் அதிகமாக உலாவும் இடம் வெள்ளியங்கிரி. பல வேளைகளில் கடைகளை எல்லாம் இடித்து தள்ளிவிடும். பாம்பாட்டி சுனையுக்கு சற்று மேலே 3வது மலைக்கு செல்லும் பாதை தென்பட்டது. அது பாதையல்ல. ஒரு சுவர். மெல்ல கடந்து மேலேறிய பிறகு, தங்கவேல் சார் இனிமே பிரச்சனை இல்லை என்றார். முழுபொய் என்றேன்.

  5
 ----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பெருமழையில் பெயர்ந்த கற்கள் குவியலாக மாறி படியென அமைந்து மூன்றாவது மலை ஆரம்பித்தது. மரங்கள் அடர்ந்து பாதையின் இருபுறமும் சுவர்போல இருந்தது. வலிய வேங்கை மரங்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தது. எங்க வீட்டு பிள்ளை எம் ஜி ஆர், நம்பியாரை அடித்தது போல வேங்கை மரத்தில் வரி வரியான தழும்புகள். ஆம் அங்குள மலைவாழ் மக்கள் அவற்றிலுருந்து பால் எடுப்பதற்காக பட்டையினை உரித்துவைத்துள்ளனர்.
 நல்ல வேளை மலையேறும் பொது மக்களுக்கு தெரிந்தால் பட்டைக்கு பதிலாக மரத்தையே உரித்து எடுத்திருப்பார்கள். மரங்கள் அடர்ந்திருந்ததால் இருட்டு மேலும் கருமை அடைந்திருந்தது. இயந்திரம் போல கால்கள் மேலேறிக்கொண்டிருந்தது.
 அரைமணி நேரம் நடந்தபிறகு கைதட்டி சுனையினை பார்த்தோம். சுனை நீர்தேங்கிய குட்டையாக இல்ல்லாமல் ஒரு ஊற்றுபோல இருந்த்து. அதில் ஒரு மூங்கில் குழாயினை கட்டி ஒரு பைப் போல மாற்றியிருந்தனர். சுனையில் கைதட்டினால் நீர் அதிகம் வரும் என்றார்கள் – உண்மையா என கண்டறிய முடியவில்லை. ஏறி வந்த களைப்பு தண்ணீரை ஒரு அரிய பொருளாக மாற்றி இருந்த்து. சுனையில் நீர் குடித்தோம், சுவை நாக்கில்பட்டு உடல் முழுவதும் பரவியது.
 மூன்றாவது மலை சற்று சிறிய மலை. ஒரு நேர்குத்தான படிகளில் ஏறி ஒரு சமதளபரப்பை வந்தடைந்தோம்.
 3வது மலை முடிவிற்கு வந்தது. அங்கும் கடை இருந்தது. கடையில் மோர் இருந்தது. மோரும் தயிரும் என்ன ஆனாலும் பிறர் வீடுகளிளோ, கடைகளிளோ சாப்பிடமாட்டேன். ஏனெனில் தயிர் தகைவதும் மோர் பெருக்குவதும் செய்வதற்கு எளிதாக இருந்தாலும் உண்மையில் எளிதான வேளை அல்ல. சமையலில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே ஒரு நல்ல தயிரையும் மோரையும் உருவாக்க முடியும். நவீன யுகத்தில் தயிரை உடைந்து தண்ணீர் சேர்த்து நீர்த்தால் மோர் என்ற மடமையான செயல்பாடு உள்ளது.
  கடையில் மோர் நன்றாக இருந்தது. மிகச்சரியான புளிப்பு, நுண்ணிய அளவில் லாக்டோஸின் இணிப்பு, அளவான நீர், பாலடையில்லா தெளிந்த கரைசல், அற்புதமான பி.ஹெச் – மனதார பாராட்டினேன். நேரம் இரண்டு மணி. கடைக்கு அருகிலேயே பலர் தூங்கிக்கொண்டிருந்தனர். குளிர் வாட்டியெடுத்தால் கால்களை குறுக்கி நெஞ்சொடு சேர்த்து போர்வையை மூடி ஏதோ ஒரு மூட்டை போல மனிதர்கள் மல்லாந்திருந்தனர்.
 அதுக்குள்ளவே தூக்கமா என்று கடிகாரத்தை பார்த்தேன் மணி நள்ளிரவு 2 மணி. பகீரென்றது இவ்வளவு நேரமாகிவிட்டாதா?? காலைக்குள் போய் சேரமுடியுமா என்ற அச்சமும், இவ்வளவு நேரமாகியும் தூக்கத்தின் அறிகுறிகளோ களைப்பின் முகாந்திரமோ இல்லாது குறித்து ஆச்சிரியமும் அடைந்தேன். ஆனால் நினைத்தாலும் அவ்வளவு எளிதாக தூங்கமுடியாது என பிறகு புரிந்துகொண்டேன்.
 ஒரு கணம் நடப்பதை நிறுத்தினாலும் குளிர் ஊசிபோல ஊடுருவி நடுங்கவைத்துவிடும். இத்தனைக்கும் மூன்றாவது மலை மணிபூரகத்தின் தன்மையான அக்னி அம்சம் நிறைந்தது என்பார்கள். கட்டுக்கதை என நினைத்துகொண்டேன். ஒருவேளை மேலே போக போக இதைவிட குளிராக இன்னும் இருக்குமோ??? இப்போது பாதை ஒரு ஒற்றையடி பாதை போலவும் இருபுறமும் புற்கள் நிறைந்தும் புற்களுக்கு கீழே டார்ச் அடிந்தாலும் விலாகாத இருளடர்ந்த பள்ளத்தாக்கும் உடன் வந்து கொண்டிருந்தது.
 ஒரு நீண்ட நடைக்கு பிறகு மிகவும் விசாலமான புல்வெளிபிரதேசம் தென்பட்டது. ஆம் அதுவே 4ஆம் மலையின் துவக்கம். ஏற்ற இறக்கம் இல்லை ஒரே சமதளம். ஒருபுறம் அடர்ந்த காடு மறுபுறம் பள்ளத்தாக்கு. அடர்ந்த காடுகளுக்குள் என்ன இருக்கும். இந்த இருட்டில் போகும் மனிதர்களை பார்த்துகொண்டிருக்குமா? இருளில் காடு விழித்து வெறித்து பார்ப்பது போல இருந்தது. பதறி நடந்தேன். வளைந்தும் நெளிந்தும் ஒரு கரிய பாம்பு கிடப்பது போல பாதை நீண்டது.
  ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு 4ஆவதுமலை முடிவிற்கு வந்துவிட்டது. 5வது மலை சமதளமாக இல்லாமல் கீழிறங்கியது. அருவி கொட்டும் பாறையின் நுனியினை போல ஒரு அரைவட்ட பாறை விளிம்பில் பாதை முடிந்தது. கிடு கிடு பள்ளம். ஏழெட்டு டார்ச் ஒளிகள் ஸ்டார்வார்ஸ் சண்டைக்காட்சி போல குறுக்கே கலந்து பள்ளத்தின் ஆழத்தினை கணக்கெடுத்தது. ஒரு பெரிய கூட்டம் பள்ளத்தில் இறக்க பம்மிக்கொண்டிருந்தது. பின் மெதுவாக ஒவ்வொருவராக சர்வ ஜாக்கிரதையாக இறங்கிக்கொண்டிருந்தனர்.
 கற்கள் பெயர்ந்தாலோ அல்லது கால் வழுக்கி விழுந்தாலோ என்ன ஆகும் என கற்பனை செய்யக்கூட முடியவில்லை. வெள்ளியங்கிரி ஆண்டவரை கூவிக்கொண்டே கூட்டம் தாண்டி சென்றது. பிறகு நின்றும் குனிந்தும் வளைந்தும் உட்கார்ந்தும் தாவியும் பாறையினை கட்டித் தழுவியும் ஒருவழியாக நாங்களும் கடந்தோம். சிறிது தூரம் சென்றதும் முன்பு பார்த்ததைவிட பெரிய பள்ளம்.
  அட கடவுளே. திரும்பவும் அதே எச்சரிக்கையும் கூடுதல் அட்ரீனலினலும் கலந்து இறங்கினோம். அப்பா இந்த பள்ளம் மட்டுமே ஒரு மலை ஏறியதற்கு சமமாகும் என நினைத்துகொண்டேன். ஆனால் பிரச்சனை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை.
  ஒரு நீண்ட சமதள பயனத்திற்கு பிறகு அதே போன்ற ஒரு பள்ளம். ஆனால் அவ்வளவு ஆழம் இல்லை. பள்ளத்தில் இறங்கி பழகிவிட்டதால். எளிதாக கடந்தோம். பிறகு லேசாக மலை கீழிறங்க ஆரம்பித்தது.

 இதுவரை ஏறிய பழக்கப்பட்டிருந்த கால்கள் இறக்கத்தை பார்த்தவுடன் தறிகெட்டு இறங்க முயற்சித்து, விரைத்து பிடித்துகொண்டது. இறங்குவது அவ்வளவு எளிதானது அல்ல என தோன்றியது. சற்று தொலைவில் இருளில் ஒரு கரிய பூதம் போல ஒரு பெரும் பாறை உருளத்தயாராக இருந்தது. டார்ச் அடித்துப்பார்த்தோம்.
  ஏறக்குறைய ஒரு பந்து ஆனால் எப்படி உருளாமல் இருக்கிறது என தெரியவில்லை. அது பீமன் தனது அஞ்ஞாத வாசத்தில் தின்று மிச்சம் வைத்த களியுரண்டையின் ஒரு பகுதி என்றார்கள்.
  5வது மலையில் அங்காங்கே பெரும் பெரும் பள்ளங்கள் இருந்தது. பள்ளங்கள் எல்லாம் நல்ல வெண்மை நிறத்துடன் இருந்தது. 5ஆம் மலை சுண்னாம்பு பாறையால் ஆனது என தெரிந்தது. அந்த பள்ளம் எல்லாம் கரடி நோண்டியதோ, யானை தன் தந்தத்தால் பறித்ததோ இல்லை. எல்லாம் மனிதர்கள் செயல். சுண்ணாம்பு பாறையை நோண்டி திரு நீறு எடுத்திருக்கிறார்கள்.
  சைவ மரபுப் படி மண்ணை திருநீராக அணியலாம் என்றாலும் சுண்ணாம்பை மணலை பூசமுடியுமா என தெரியவில்லை. எது எப்படியோ அந்த மண்ணின் ஒரு பிடி மலையின் அனுக்க மாதிரி என்பதால் நம்முடன் கொண்டு வரலாம். மரங்கள் அடர்ந்து வர ஆரம்பித்தது. வானத்தை கூட பார்க்கமுடியவில்லை.
  வெகுதூரத்தில் பேச்சு சப்தங்கள். நீர் சலசலத்து ஓடும் ஒலி. பாதையில் நடுவில் வீழ்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தை தாண்டியவுடன் மணிதர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். சற்று தள்ளி தடாகம் போல் இல்லாமலும் வாய்க்கால் போல ஓடாமலும் ஒரு சுனையினை கண்டோம். அது புனிதத்தின் உச்சமாக கருதப்படும் ஆண்டி சுனை.
 6
-----------------------------------------------------------------------------------------------------------------------    

ஆண்டி சுனை, வெள்ளியங்கிரிக்கு ஒரு மினியேச்சர் மனசரோவர்.
 ஒரு அறுபதடி நீளமுள்ள நீண்ட வாய்க்கால் போன்ற அமைப்பு. அதில் 20 அடிக்கு சிறிய நீர்த்தேக்கம் போல நீரைத் தேக்கி வைத்திருந்தார்கள். தேங்கி வழிந்த நீர் மேற்கு நோக்கி சென்று மறைகிறது.
 நீரை தேக்கி வைத்துள்ள இடம் வெறும் 3 அடி ஆழமே உடையது. இரவு 3 மணியளவில் வாட்டும் குளிரில் சுனையினை வந்தடைந்தோம். கருமை படர்ந்த நீருக்குமேல் வெண்புகையென பனி படர்ந்திருந்தது. குளிக்க நினைத்து காலை விட்டவர்கள் நீரின் குளுமை கண்டு பீதியடைந்து தலையில் தெளித்து சென்றுகொண்டிருந்தனர். தங்கவேல் சார் காலையிலே குளித்துவிட்டதாக கூறினார்.
 ஒரு கணமும் தாமதிக்காமல் ஆணவம் கண்மம் மாயை ஆகிய மும்மலத்துடன் உடைகளையும் கழற்றி நடுங்கும் உடலுடன் சுனையில் கால் நனைத்து அப்படியே நெடுஞ்சான்கிடையாக விழுந்தேன். சுனையின் அதீத குளுமை தீயைப் போல சுட்டது. நீருக்குள் மயிர்கால் விரைத்து அதன் வேர் வழியே வெப்பம் புகுந்து தோலை துளைத்து எலும்பின் மஜ்ஜை வரை ஊடறுத்துச் சென்றது. பத்து நொடிகள் அசைவற்று மூழ்கியிருந்து பின் எழுந்து மும்முறை நீர்புகுந்து மேலெலுந்தேன்.
  உடைமாற்றி ஆரஞ்சு சுளையினை விழுங்கி குளுக்கோஸை கொட்டிக்கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மலை மேலும் வேகமாக கீழிறங்க ஆரம்பித்தது. மிக நீண்டதொலைவில் வானத்தில் அவ்வப்போது நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தன. ஆனால் அது நட்சத்திரமாக இருப்பதற்கு வாய்பில்லை. ஏனெனில் பால்வெளி மண்டலம் வேறு ஒரு கோணத்தில் நீண்ட தொலைவில் ஒரு ஒளிப்பட்டையாக மிளிர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் வானத்தில் அவ்வப்போது வெளிச்சம். ஆச்சரியமாக கூவினேன்
  “ சார் இது நம்ம மகரஜோதி செட்டப் மாதிரியே இருக்கே” என்றேன். இல்லை ஆட்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். வானத்திலா என்று கிண்டலாக கேட்டேன். இல்லை ஏழாவது மலையில் என்றார்.
 திடுக்கிட்டு மீண்டும் பார்த்தேன், வெகு உயரத்தில் வெளிச்சங்கள் மின் மின் பூச்சிகள் போல மின்னியது. மீண்டும் நடை , கீழிறங்கிய மலை பின் சமதளமாக சென்றது. வலது புறத்தில் காடு அடர்ந்து வினோத ஒலியெலிப்பிக்கொண்டிருந்த்து. சற்று தள்ளி ஒரு கடை , இதுவே கடைசி கடை ,ஏழாவது மலையில் கடை ஏதும் இல்லை என்பதால் கூட்டமாக இருந்த்து. பக்த கோடிகள் காபியா டீயா என பகுத்தறிய இயலா நிலையில் உள்ள திரவ வஸ்துவை உறிஞ்சிக்கொண்டிருந்தனர். வெறும் 5 ரூபாய் முக மதிப்புடைய சுக்குகாபியை இருபது ரூபாய் சந்தைவிலை கொடுத்து பருகினோம்.
  நீண்ட நடைக்கு பிறகு புவியமைப்பு மாறுவது தெரிந்த்து. மரங்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. மண் சற்று பிசுபிசுத்து இருந்தது. கையிலெடுதுப் பார்த்தேன். களிமண் மற்றும் கொல்லுவியல் மண். இப்போது ஏழவது மலையில் உள்ளோம் என தெரிந்தது. பயணத்தின் இறுதியினை நெருங்கிவிட்டோம் என மகிழ்ந்தாலும், எதிரே தெரிந்த பாதை மற்றுமொரு பெரும் இடர் நிறை பயனத்திற்கு அறை கூவல் விடுப்பது போலிருந்தது.
 பாதையற்ற பாதையாக மெல்லிய கோடாக அவ்வப்போது மறைந்தும் நெளிந்தும் பாதை வளர்ந்தது. தூரத்தில் தூசிபோல ஏதோ நெருங்கி வந்தது. அது மேக மூட்டம், அடர்பனியினை ஒரு போர்வை போல போர்த்தி சென்றது.
 சட்டன மாறிய வானிலையில் 10 அடிக்கு அப்பால் என்னவென்று தெரியாத பயனத்தை மேற்கொண்டோம். டார்ச் அடித்து பாதையை பார்த்தால் ஒரு அடியிலேயே வெளிச்சம் சிதறி ஒரு கூம்பு போல அதன் ஒளித்தடம் மாறி அதில் பனித்துளிகள் ஒளிர்ந்த்து. வாட்சில் மணி தெரியவில்லை. அதற்குள்ளும் பனி படர்ந்திருந்த்து. கைச்சூட்டில் பனி விலக்கி மனி பார்த்தேன் மணி 3.30 பயனம் அசாத்தியமாக மாறிக்கொண்டிருந்த்து.
 லார்ட் ஆப் தி ரிங்கஸ் கதையில் (படத்தில்) ப்ராடோவும் சாமும் மோதிரத்தினை அழிக்க மர்டோர் நோக்கி செல்லும் காட்சி நினைவிற்கு வந்தது. இப்போது பாறை அங்கங்கு தென்பட ஆரம்பித்தது. அவையெல்லம் உறுதியற்ற பாறைகள்.
 ஒரு உருகும் ஐஸ்கிரீமில் உள்ள வால்நட்டை போல பாறைகள் அக்களிமண் மலையில் செருகிவைக்கப்பட்டது போல இருந்தது. முதல்நாள் பெய்த மழையின் ஈரம் மண்ணுள் இருந்தது. ஒரு திருப்பதில் தவறிகால்வைத்து உருண்ட கற்கள் சரிவில் சென்றுகொண்டே இருந்தது. மீளமுடியா பெரும்பள்ளத்தின் விளிம்பில் வெறும் குச்சியினையும் டார்ச் விளக்கை வைத்து மட்டுமே சென்றுகொண்டிருக்கிறோம் என உறைத்த்து.
 குளிர் மேலே செல்ல செல்ல தீவிரமாகியது. எப்படியும் 12லிருந்து 13 செண்டிகிரேட் வரை இருக்கலாம். பனிபுகை ஒரு புயலென மேலிய சீழ்கை சப்த்ததுடன் அமானுஷ்யமாக அடித்துகொண்டிருந்த்து. வெகு நேரமாக ஒன்றை கவனிக்காமல் விட்டுவிட்டோம் அது எங்களைத் தவிர வேறு யாரும் அரைமணி நேரமாக தென்படவில்லை.
 அப்படியென்றால் வழிமாறிவிட்டோமா. பாதையினை டார்ச் அடித்து கவனமாக ஆராய்ந்தேன். புதிதாக எவ்வித காலடித்தடமின்றி இருந்த்து. சிறு செடிகள் முனை மடியாமல் நிமிர்ந்து நின்றது. யாரும் செல்லாத வழியில் போவதாக தோன்றியது. தங்கவேல் சார் கலவரமடைந்து மெல்லிய குரலில் “இது சத்குரு குகைக்கு போற வழி அனேகமா இது மலைக்கு நேர்பின்னால் செல்லும்” என்றார். என்ன பிரச்சனை என்றேன்.
 அது ஒரு மாபெரும் பள்த்தாக்கின் நுனியில் உள்ள குகை. இன்னும் சொல்லப்போனால் அவதார் படத்தில் வரும் தொங்கும் பாறை போன்றது. சற்று தவறினாலும் ஒரு கிலோமீட்டர் நேராக வீழ்வோம் என்றார். நிச்சயமாக திரும்பி போக முடியாது. என்ன செய்வதென தெரியாமல் பாறையில் உட்கார்ந்தோம்.
  ”நா அப்பவே சொல்லல! இதுக்குதான் பகலில் வரனும்” என சாத்தான் மனதில் கூவியது. ஒரே வழி. விவேக் பானியில் மெட்ராஸுக்கு மொத்தம் 6 நம்பர்தான் போனை போடு என்பது போல மலை சரியான கூம்பு வடிவத்தில் இருந்த்து. பாதை கூம்பை சுற்றி வட்ட வட்டமாக மேலேறுகிறது. நாம ஏன் நேர்குத்தாக ஏறக்கூடாது?? சரியான சவால் பின் நேர்மேலே கயிற்றில் ஏறுவது போல நீட்டிக்கொண்டிருக்கும் பாறையில் கால் வைத்து கை வைத்து கழி ஊண்றி கொட்டும் பனியில் மேலேறிகொண்டிருந்தோம்.
 ஒரு ஐந்து நிமிடத்தில் பாதையினை பிடித்துவிட்டோம். மேலிருந்து ஒரு கூட்டம் கீழிறங்கியது. தேவலோகத்தில் இருந்து வருவது போல இருந்தது. இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டோம். அவர்கள் மையமாக பக்கம்தான் என்றார்கள். இப்போது அவர்கள் இன்னும் எவ்வளவு தூரம் கீழறங்கனும் என்றார்கள், இப்போது எங்கள் முறை “ கொஞ்சதூரம் தான் சீக்கிரம் இறங்கிறாலாம்” என்றோம். அரை மணி நேரத்திற்கொருமுறை இதே கேள்வியை இறங்குபவர்களிடம் கேட்பதுவும் அவர்களும் அதே பல்லவியினை பாடுவதும் நடந்தேறியது.
 ஊதல் சப்த்த்துடன் பனிக்காற்று சுழற்றியடிக்க காலில் மென்மையான ஏதோ ஒன்று உரசி சென்றது. பனி மூட்டத்தில் என்னவென்று தெரியவில்லை. பிறகு 10 அடி தொலைவில் இருந்த பாறையில் அது கம்பீரமாக நின்று கொண்டிருந்த்து. அது ஒரு நாட்டு நாய்… ஆம் நாய்தான். ஆனால் இவ்வளவு தொலைவு மேலேறுவதை நினைத்து ஆச்சரியமாக இருந்த்து. நாய்க்கு பின்னால் ஒரு மனிதன் போகவும் அவனை பின் தொடர்ந்து நாயும் சென்றது.
 ”நாய் உங்களடோதா?” என்றேன். ”இல்ல என் பின்னாடியே வருது. எனக்கு வழிகாட்டிக்கொண்டே போவுது” என்றார். பிறகு இருவரும் மேலேறி நடந்து பனியில் மறைந்து போனார்கள். ”சார் நல்ல கவனிங்க இந்த 2 பேர்ல யாரோ ஒரு ஆள் சித்தர்” என்றேன் வேடிக்கையாக ”அனேகமா நாய்தான் ஒரிஜினல் சித்தராக இருக்கும்” என்றார் தங்கவேல் சார்
  10 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலை அரப்பள்ளி ஈஸ்வரன் கோவில் அருகே மாணிக்க சித்தர் என்றும் மாட்டு சித்தர் என்றறியப்படும் நபரின் பின் பத்து பதினைந்து தொழிலதிபர்கள்/ செல்வந்தர்கள் சட்டையின்றி கருத்து தடித்த உடலில் மயிரடர்ந்த மார்பில் கனத்த தங்கச்சங்கிலி அனிந்து போலியான பணிவுடன் சுற்றிக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
 அவர்களுக்கு மட்டும் இந்த நாய் அகப்பட்டால் நாய் சித்தர் என பெயரிட்டு இதற்கு ஒரு கோயிலை கட்டுவார்கள்.
 மேலும் மேலும் மேலேறி ஒரு சரிந்த மண்பரப்பினை அடைந்தோம். மீண்டும் இரு வழிகள். நேரக சென்றோம். “வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழி” என ஒரு புத்தம் புது வழிகாட்டு பலகை தென்பட்டது.
 வந்துவிட்டோமா?? அதற்குள்ளாகவா. நீண்ட தொலைவில் இருளில் மாபெரும் மாடு ஒன்று தன் முன்னங்கால்களை மடக்கி தன் தலையினை வான் நோக்கி பார்ப்பது போல ஒரு உருவம் தோன்றியது.
  காட்சி மயக்கமா கற்பனையா எனத் தெரியவில்லை மாடு தன் தலையினை மெல்ல திருப்புவது போல தோன்றியது. அது மாடல்ல ஒரு மாபெரும் பாறை. எப்பகுதியிலுருந்து பார்த்தாலும் நந்தி போல தோற்றமளிக்கும் இயற்கையான பாறை.
  ஆம் அது செதுக்கப்பட்டதல்ல. இயற்கையின் தீரா விளையாட்டில் ஒரு பகுதி போல பாறை இருந்தது. பாறைக்கு கீழே படிகள் தோன்றி ஆலயத்திற்கு சென்றது. அருமை நண்பர் தனசேகரன் தன் குழுவினருடன் நின்று கொண்டிருந்தார்.
 ஒரு தூய புன்னகையும் குழந்தையின் சிரிப்புடனும் வரவேற்றார். பாறையில் செதுக்கப்பட்ட படிகள் ஆண்டவரின் சந்நிதானம் நோக்கி நீண்டது. படிகளின் வழியே இரு சாதுக்கள் முகம் நிறைந்த திருநீற்றுடன் என்னை வெறித்து நோக்கி கடந்து சென்றனர். மயிர் சிலிர்ப்படைந்து உடல் ஆடியது. மனதின் நீண்ட ஆழத்தில் எவரோ என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் என்னையும் புணர்ப்பவன் கோவில் என்று அரற்றுவது கேட்டது. அது நான்தான் என்று பின்பு அறிந்தேன்.
  கனவின் வெளியில் நின்று கொண்டிருக்கிறேன். காலம் பனிப்புகையென என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.
 7
--------------------------------------------------------------------------------------------------------------------

மணி 5. இன்னும் விடியவில்லை.
 நந்தி பாறையிலிருந்து கோவில் நோக்கி செல்லும் படிநெடுக கூட்டம் களைத்தும் சோர்ந்தும் நின்றிருந்தது.
 கூட்டத்திற்கு அப்பால் வேல்களை வரிசையாக செருகி வைத்த வேலிக்குட்புறமாக கைகூப்பிய நிலையில் நின்று பக்த கோடிகள் கும்பிட்டுகொண்டிருந்தனர்.
 6000 அடிக்கு உரித்தான குளிர் வாட்டிக்கொண்டிருந்தது. கூட்டம் குறையட்டும் என்று பாறையின் ஓரமாக அமர்ந்தேன். ”சாமி இங்க உக்காரதீங்க! ரத்தம் உறியற அட்டை நிறைய இருக்கும்” என்றபடி பூசாரிபோல் தோற்றமளித்த நபர் கடந்து சென்றார்.
 உடன் உட்கார்ந்திருந்தவர்கள் பதறியப்டி எழுந்து உடைகளை உதறினார்கள். சலிப்படைந்து மேலும் அமைதியாக அமர்ந்தேன். அந்த சூழலில் ஹிர்டுனியா வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை. குறுகிய இடத்தில் கூட்டம் சேரவிடகூடாது என்ற முனைப்பில் கோவில் பூசாரிகள் எப்படியாவது ஆட்களை துரத்தி விடுவதற்காக இது போன்ற கதைகளை கட்டிவிடுகிறார்கள் என புரிந்து கொண்டேன். பொய்யர்களும் அயோக்கியர்களும் சர்வ வியாபி என்பது கண்கூடு.
 ஏறக்குறைய 7 மணி நேரமாக சுமந்த பையை கழற்றி கீழேவைத்தேன். ஏதோ என் உடலை உதறி சர்வாத்மாகவும் சர்வ சுதந்திரமாகவும் இருப்பது போல இருந்தது. பின் நானும் தங்கவேல் சாரும் கூம்பிட்ட கரங்களுடன் சந்நிதானத்தின் முன் நின்றோம்.
 பாறையின் உட்குழிவு குகை போன்று தோற்றம் காட்டி கோவில் அமைந்திருந்தது. மொத்தமாக ஒரு 20 சதுர அடி இருக்கலாம். குகையினுள் நிமிர்ந்து நிற்கமுடியாது. உட்காரும் அளவிற்கே அதன் உயரம் அமைந்திருந்த்து. குகையின் தரை முழுவதும் வில்வ இலைகளால் நிரம்பி இருந்த்து.
  வில்வ இலைக் குவியலின் நடுவே மொட்டு மலர்வது போல 3 சிவலிங்கங்கள் அரும்பி இருந்தது. சுயம்பாக உருவான லிங்கம் என்பதால் ஆவுடையார் இல்லை. பிரம்ம பாகமும் விஷ்னு பாகமும் ஒரு வேளை பாறைக்குள் இருக்கலாம். ருத்ரபாகம் மட்டுமே வெளியில் தெரிகிறது.
 இந்த 3 லிங்கங்கள் தவிர வெளியில் உள்ள இருபெரும் பாறைகளை லிங்கமாக கணக்கில் கொண்டால் மொத்தம் 5 லிங்கங்கள் அடங்கிய பஞ்ச லிங்க தலமாக வெள்ளியங்கிரியை கொள்ளலாம்.
 முறைப்படி முதல் மரியாதை கனபதிக்கு என்பதால் கோவிலைக் கடந்து சற்று மேலேறி தோரணவாயில் கனபதியினை பார்க்க சென்றோம். கனபதி சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டதால், அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. ஆனால் அந்த இடம் அதிஅற்புதமான இயற்கை கட்டமைப்பில் இருந்த்து. ஒரு பெரும் பாறையினை கோடாலியால் பிளந்து பிரிந்து வைத்து அதன் இடைவெளியில் மாபெரும் தட்டையான கல்லால் ஒரு கூரை செய்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். ஆம் அப்படியே அமைந்திருந்த்து. அந்த பாறை இடைவெளியில் எப்படி ஒரு தட்டையான கல்லை மிகச்சரியான படுக்கை வசத்தில் இயற்கை வைத்துள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றே.
 பிறகு மீண்டு கீழிறங்கி திருமூலட்டானத்தினை அடைந்தோம். பருத்த மனிதர் நெற்றி நிறைந்த விபூதியுடனும் காவிப்பல் சிரிப்புமாக அமர்ந்திருந்தார். பருத்த வயிறு சம்மனமிட்டு அமர்ந்த துடையின்மேல் உட்கார்ந்திருந்த்து. அந்த இடைவெளியில் நூலிலைபோன்ற அவரது கோவனம் மறைந்து போனதால் அவர் சம்மனமிட்டு அமர்ந்திருந்தாரா அல்லது அம்மனமிட்டு அமர்ந்திருந்தாரா என கண்டறிய இயலவில்லை.
 அருகில் சென்ற உடன் கையள்ளி திருநீறெடுத்து புருவமத்தியினை அழுத்தி நெற்றி நிறைய பூசிவிட்டு வெள்ளந்தியாக சிரித்தார். பல்லாண்டுகளுக்கு முன் முதன்முறையாக சிதம்பரம் கோவிலில் கேட்ட என்று வந்தாய் என்ற தேவரப்பாடல் மின்னி மறைந்தது.
  நான் சிவனருட் செல்வனில்லை, என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்தில் என்னையும் புணர்பவன் என்று பொய்யுரைக்கவும் துணிபவன் அல்ல இருந்தும் ஏதோ ஒரு மாயவலையில் வீழ்ந்து மையம் நோக்கி செல்லும் இரைபோல அங்கிருந்தேன். பின் மும்முறை தொழுது பின்னகர்ந்து பெருமூச்சுடன் சற்று கீழிரங்கி உட்கார்ந்தேன்.
 நண்பர்கள் தனசேகரனும், கருப்பண்ணனும் வேல் வேலிக்குள் நின்று பூசை பார்க்கப்போவதாக கூறினார்கள். வேகமாக புலரும் காலை நேரத்தினை படமெடுப்பதற்காக நந்தி பாறைக்கு அருகில் சென்றேன். இருளில் கருத்த மலைகளின் விளிம்பின் வெளிச்சம் மெலிதாக படர்ந்து பின் வீறு கொண்டெழுந்து செங்கொழுந்தினைப் போல் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. கனத்திற்கு கனம் நிறங்கள் மாறிக்கொண்டே இருந்தது. நீலத்தில் இத்தனை வகைகளா? நீல நிறமும் காலை தென்றலும் நெஞ்சு நிறைந்த அமைதியினையும் நிறைவையும் அளித்த்து.
 மேகங்கள் மலையினை மறைப்பதும் பின் மறைவதுமாக விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை மூலட்டானம் சென்று சாமிகும்பிட தங்கவேல் சார் அழைத்தார். எனக்கு ஏனோ விருப்பமில்லை. கேமராவை அவரிடம் கொடுத்து இங்கேயே உட்கார்ந்திருப்பதாக தெரிவித்தேன்.
  பாறையின் சுவரில் சரிந்து உட்கார்ந்து முதுகுப்பையினை இறக்கிவைத்தேன். பை ஒரு உயிருள்ள செல்லபிராணி போலவும் என் பொருட்டு அதுவும் என்னுடன் இருப்பதாகவும் தோன்றியது. என் கண்ணாடி, கடிகாரம் யாவும் ஜடப்பொருட்கள் என்பது மறைந்து உயிர் நிரம்பிய துணையாக தோற்றமளித்தது. ஒரு ஆழ்ந்த தன்னிரக்கம் தோன்றி உடல் தளர்வடைந்து தாங்க இயலா துயரம் பீடித்துகொண்டது. சே!! என்ன இது. பைத்தியம்தான் பிடித்துவிட்டதா என தலையினை உதறி தண்ணீர் குடித்தேன்.
 தூரத்தில் ஆட்கள் இன்னமும் மேலேறிகொண்டிருந்தனர். இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக செல்போனில் படமெடுத்துகொண்டிருந்தனர். காலருகே ஒரு சிறு குருவி புல்லைக் கொத்திக்கொண்டிருந்தது.
  மாட்ரிக்ஸில் நியோ கேட்கும் புராதானமாக மனித குலம் ஆரம்பம் தொட்டு வினவும் கேள்வியான “What is the purpose of Life” மனதில் எதிரொலித்துகொண்டிருந்தது.
  தூரத்தில் தங்கவேல் சார் வந்துகொண்டிருந்தார். பின் இருவரும் பழங்கள் சாப்பிட்டு புகைப்படங்கள் எடுத்தோம்.
   காலை மணி 7.00 புறப்படும் வேளை நெருங்கியது. காலடியில் மேகங்கள் தழுவிச்சென்றன. நீண்ட பெருமூச்சில் வீடு நோக்கிய பயணம் தொடங்கியது. இரவில் பார்த்த இடங்கள் வெளிச்சத்தில் வேறொன்றாக தெரிந்த்து.
  பெரும் பள்ளத்தாக்கும் வழுக்கும் பாறைகளும் நாம்தான இரவில் இதை கடந்தது என வியக்க வைத்தது. இரவின் அதீத குளிரில் குளித்த ஆண்டி சுனை தெளிந்த ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது.
  நடந்துகொண்டே இருந்தோம். ஓவ்வோரு மலையாக இறங்கினோம். நேரம் செல்ல செல்ல கால்கள் நடுங்க ஆரம்பித்தது. ஓடும் கால்களை சிரமப்பட்டும் பிடித்து நிறுத்தி மெல்ல பக்கவாட்டில் சற்று சாய்ந்து வலியின் முனகலில் படிப்படியாக கீழிறங்கினோம்.
  முதல் மலையின் முழங்கால் உடைக்கும் படிக்கட்டுகளில் கால்கள் முற்றிலுமாக செயலிலந்து போல தோன்றியது. அடிவாரத்தில் இருந்து ரேடியோ சத்தம் தெளிவற்று கேட்கத் துவங்கியது. தாங்க இயலா வலியில் கால் துடிக்க அப்படியே கீழே விழுந்து அமர்ந்தேன்.
  அடிவாரத்தின் கோவில் கண்ணுக்கு தெரிந்தது. வெகு தொலைவில் தங்கவேல் சார் சென்று கொண்டிருந்தார். சக்தியெல்லாம் திரட்டி படிகளை கடந்து முதல் படியின் அருகில் உள்ள கோவிலில் நட்ட கம்பத்தினை பிடித்து தடுமாறி நின்றபோது, வீபூதி தட்டுடன் பூசாரி “ சாமி விழுந்திராதீங்க! பத்திரமா போங்க!!” என்றார் தாயின் மடியில் இருந்து இறக்கிவிடப்பட்ட கைக்குழந்தை போல நின்று கொண்டிருந்தேன். மலை வெயிலில் பளபளத்துகொண்டிருந்தது.  கால்களின் முன்னால் வீட்டிற்கு செல்லும் பாதை.  

நிறைந்தது.

Thursday, 18 August 2011

லூடோவிக்கோ எய்னூடி – இசையில் ஏர்டெல் விளம்பரம் - பாலையின் வெம்மையும் குறிஞ்சியின் குளிர்ச்சியும்

சிறைக்குடி ஆந்தையார் இயற்றிய ’பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன’ என்ற குறுந்தொகைப் பாடலொன்றுள்ளது. பெரு நீர்பரப்பில் கட்டற்ற காதல் கொண்டலையும் இரு நீர்பறவைகளின் பாதையில் குறுக்கிடும் பூவினால் அவை கனநேரம் பிரிந்து பின் கூடி புணர்கிறது. அக்கணநேர பிரிவு பற்பல யுகம்போல மின்னிமறைகிறது.
நெருங்கிய உறவுகளின் பிரிவென்பது அச்சமூட்டுவது. பாலைத்தினையின் பாடல்களில் அடிநாதமாக தகிக்கும் வெம்மையும் பிரிவின் கசப்பும் ஆற்றாமை கொண்டு அலறி துடிப்பதை உணரலாம்.
ஆனால் இதற்கு நேர்மாறாக குறிஞ்சி புணர்ச்சிக்குரியது. குளிர்காற்றும் பணிமழைச் சாரலும் ஈர நிலத்தில் உதிர்ந்து கொட்டும் வெங்கைப் பூக்களும் இணைதேடி அலையும் மானும் களிறும் என மலைவளத்தினை அப்படியே காட்டி இழுக்கும் பாடல்களே குறிஞ்சித்திணை.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் குறிஞ்சியோ பாலையோ முற்றாக இருப்பதில்லை. மாறி மாறி சுழித்தடிப்பதே வாழ்க்கை.,
லூடோவிக்கோ எய்னூடியின் இசையைப் பயன்படுத்தி ENDLESS GOODBYE என வெளியாகியுள்ள ஏர்டெல் விளம்பரம் அத்தகையது. பிரிவின் துயர் மற்றும் அதன்பின் நிகழும் கூடல் என மாறி மாறி நிகழும் காட்சியாக அப்படம் அமைக்கப்பட்டுள்ளது. காதலின் பித்துநிலை கொண்ட காதலர்கள் அடங்கா ஆர்வத்துடன் சந்தித்து மகிழ்கிறார்கள். பிறகு காதலன் வேலை காரணமாக அவளை விட்டு பிரிவதும் அவள் வருந்துவதும் பிறகு அடுத்த நொடியே அவன் மீண்டும் வருவதும் களிப்புறுவதும் பிறகு மறுபடியும் பிரிவு என தொடர்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.



ஓவ்வொரு முறையும் காதலனே பிரிகிறான். ஆணுக்கே உரித்தான பண்புகளான உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருப்பதும் பிரிவின் துயர் நெருங்காதவாறும் விலகிச் செல்வதுமாக இருக்கிறான். அதே வேளையில் துயரின் உச்சமாக காதலி காட்சியளிக்கிறாள். விளம்பரத்தின் இறுதிக் காட்சியில் இரயிலேறி செல்வான் காதலன், அப்போது தேம்பியும் கதறியும் அழும் நிலைக்கு ஒர் நூலிலை அளவே உள்ள இடைவெளியும் காதலி காட்சிதருவது பிரிவின் உச்சம். கூடலின்போது அதிகம் மகிழ்வதும் அவளே. தன்னிடமுள்ள முழுவதையும் சமர்பணம் செய்பவர்களுக்கே அது சாத்தியம். பெண்மையின் தன்மையும் அதுதானே.
**************************************************
லூடோவிக்கோ எய்னூடி (Italian pronunciation: [ludoˈviːko eiˈnaudi]) இத்தாலிய இசைவாணர், இத்தாலிய படங்கள் மற்றும் பல செவ்வியல் இசைத் தொகுப்புகளுக்கு இசை அமைத்துள்ளார்
2001ல் வெளிவந்த I Giorni என்ற பியானோ இசை தொகுப்பு புகழ்மிக்கது. அதுவே இவ்விளம்பரத்திலும் ஒலிப்பது

Tuesday, 9 August 2011

உணவெனும் தெய்வம்


பசித்தவனுக்கு உணவே தெய்வம் அல்லது பிறிதொன்றும் இல்லை. வறுமை குறித்தோ பஞ்சம் குறித்தோ பல நாள் பட்டினியாய் இருப்பை கண்டு எவன் ஒருவன் உணவு ஈந்த போதும் , அவ்வறியோர் அவ் உணவே கடவுளாகவும் அவ்வுணவு ஈன்தோரை கடவுள் விளக்கமாகவும் மிகுந்த கருணை பார்வையுடனும் நன்றி உணர்தலோடும் தெண்டனிட்டு வணங்குவதை காணும் போது உணவுதான் கடவுள் என்ற எண்ணம் நம்மிடம் எழுவதை காணலாம். இது குறிதன்றோ 'ஈத்துவக்கும் இன்பம் சிறந்தது' என்று நம்மவர்கள் போற்றி மகிழ்ந்தனர்.
அன்றியும், வாடி வருந்தும் வறியோரிடம் சென்று - "உங்கள் பசி பட்டினி யாவையும் இறைவன் போக்குவார், அவன் திரு நாமத்தை இடைவிடாது ஜெபியுங்கள் "- என பசித்திருப்பவனிடம் இறை இயலை பற்றி பேசுவோனை பார்த்து மிகுந்த அருவருப்பும் பெருத்த கோபமும் கொண்டு அவனையும் அவன் எடுத்துக்காட்டிய இறைவனிடமும் தீரா பகை கொண்டு அலைவார்.
நிலைமை இவ்வாறு இருக்க நம்முடைய மத நூல்களும் திருக்குறள் முதலாய வாழ்வியல் நூல்களும், வாயின்பதை விட செவி இன்பமே சிறந்தது என கூறும், இதனையே நம் தெய்வப்புலவர் ,
"செவியுணவின் சுவையறியா வாயுனவு மாக்கள்
அவியினும் வாழினும் ஏன்"
என கடிந்துரைப்பதையும் , கேள்வி இன்பம் உணவை விட மேலானது என்று உயர்த்திக் கூறுங்கால் எது உண்மை என்ற வினா நம்மிடையே எழுகிறது.

மேற் குறித்த கருத்துக்கள் யாவும் லட்சிய மாந்தருக்காக கூறப்பட்டதே அல்லால் நம் போன்ற மனிதருக்கல்ல என்று உய்த்துணர வேண்டும். இவ்வாறு அரிதின் அமைந்த லட்சிய மாந்தர்கள் அரிதாயும் அருகி வருதல் கண்டு உலகில் பெரும்பான்மையோர் உணவே கடவுள் என்று உழல்வது இயல்பே!

ஏன் இவ்வாறு நம்மவர்கள் அலைகிறார்கள் என்று வினவுங்கால் - பசியின் கொடுமை - பசி வந்திட தானம் கல்வி குடிபிறப்பு முதலாய பல்வகை குணங்களும் அழிந்து போம். இஃதயே மணிமேகலை,


"......குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்....."

என்று படக்கட்சியாய் நம் கண் முன் விரிக்கும்.

அம்மாட்டு நில்லாமல் தெய்வக் கண்ணிகையம் மணிமேகலை தன்திருக்கரத்தினால் அமுத சுரபி எனும் வற்றாத சோற்றுப் பெட்டகத்தினை வந்தோர் வறியொருக்கெல்லம் வாரி ஈந்து வயிறு குளிர வைத்தாள்.


'பசித்திரு' என்று உபதேசித்த நம் அருமை வள்ளலார் வாடிய பயிரைகண்டபோதெல்லாம் வாடியதோடு மட்டுமன்றி சத்திய ஞான தரும சபைதனில்எக்காலமும் இடைவிடாது எரியும் அடுப்பமைத்து பசிப்பிணி நீக்கினார்.
பசி போக்கி விருந்தோம்பும் பண்டை நாகரிக பண்பு மாந்தர் மாட்டு நில்லாமல் காட்டு வீட்டு விலங்கினகளுக்கும் பரவி நின்றது. அஃதொரு அறச் செயலாகவும் அன்றாடக் கடமையாகவும் கருதப்பட்டது.
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே
என்னும் திருமூலர் வாக்கு இனிது விளக்கும்.

ஆனால் இன்றோ விருந்து புறத்தக்க தானுண்ணும் நடையும், விருந்தினர் வரக்கண்டு வாடுதலும் , செல் விருந்தினர் மீளவும் வாராத உபசரிப்பும், வரு விருந்தினரை வரவேற்காத பண்புமே நாகரிகம் என கருதும் போக்கு உள்ளது.

இவ்வாறு உலகம் தன்னியல்பில் கெட்டு நிற்கும் நிலை வரும் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம்மவர்களுக்கு தெரிந்தோ என்னவோ ,
"செல்வத்து பயனே ஈதல் , துய்போம் ஏனின் தப்புன பலவே" என எச்சரித்து சென்றதை நினைவில் கொண்டு ஈத்துவக்கும் இன்பத்தில் திளைத்து மகிழ்வோம்.

ஆசிரியர்கள் குறித்த ஜெயமோகன் அவர்களின் கட்டுரைக்கான எனது கடிதமும் அவரது பதிலும் - 2

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

முதலில் என் கடிதத்தினைப் பிரசுரித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள், அக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது தாங்கள் பிரயோகப்படுத்தியிருந்த வார்தைகளே (மானுட மிருகங்கள், வஞ்சகர்கள், பொறுக்கிகள் , மாபியா மற்றும் புல்லர்கள்). இதை ஒரு சில அற்பர்களுக்கு மட்டுமே தாங்கள் எழுதியதாகக் கூறவில்லை. மாறாகப் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரமாக அனைத்து ஆசிரியர்களையும் உள்ளடக்கி (தாங்கள் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தவர்கள், தங்கள் மாமனார், மற்றும் திரு வேதசகாயகுமார் ஆகியோரயும் சேர்த்தே) தாக்குவதாகவே அது அமைந்திருந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நல்லவர்கள் மைனாரிட்டியாக இருக்கலாம் அதற்காக அவர்களும் அந்த அவப்பெயரினைச் சுமக்க வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம்?

எனக்குப் புரியவில்லை இவ்வளவு வெறுப்பு ஏன்? ஒரு வேளை ஆசிரியர்கள் கையாலாகதவர்கள் என்பதாலா? (அல்லது ஊதியம் ஒரு காரணமாக இருக்கலாம் – இதன் அடிப்படையிலேதான் மென்பொருள் வல்லுனர்களும் பரவலான எதிர்ப்பினைப் பெற்றுள்ளனர் எனக் கருதுகிறேன்) இதே போன்ற வசைகளைப் பிற துறை அலுவலர்களிடம் பயன்படுத்தமுடியுமா? கிராம நிர்வாக அதிகாரிகளிடம் செருப்பைக் கழற்றி வெளியே போட்டு விட்டு ரேசன் கார்டு விண்னப்பத்திற்கும் வருமான, சாதிச் சான்றிற்கும் ரூ 100 உடன் நமது பல்லிளிப்புடன் ’கொஞ்சம் சீக்கிரமாp பாத்து செஞ்சா பரவாயில்லை’ என்று கோரிக்கை வைப்பவர்கள்தாமே நாம். அவர்களிடம் நம் வீரம் எடுபடவில்லையே. இன்னும் இலஞ்சம் வாங்காத அல்லது வாங்க இயலாச் சூழலில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால்தான் மரியாதை இல்லையோ? (அதிகமாக இலஞ்சம் வாங்குவரிடம்/ அமைப்புகளிடம் நாம் காண்பிக்கும் மரியாதையும் / பயமும் அதிகமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை)

நான் உண்மை நிலை உணராமல் எழுதியிருப்பதாக நண்பர்கள் வருத்தப்பட்டுள்ளனர். தெளிவாக விளக்குகிறேன்.தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், 1வது மற்றும் 6ம் வகுப்புகளில் மாணவர்களின் சேர்க்கையானது மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது. இது தொடருமேயானால் பள்ளிகளில் ஆட்குறைப்பு முதல் பள்ளியினையே இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்படும் ( தற்போதே தொடக்கப் பள்ளிகள் சேர்க்கைக் குறைவு காரணமாகப் பரவலாக இழுத்து மூடப்பட்டு வருகின்றன). இதனைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணர்ந்தே உள்ளனர். தன் வேலைக்கே ஆபத்து என்ற சூழலில் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவார்கள் என நம்பலாம் (வேறு வழியே இல்லை என்பதால்)

இன்றைய சூழலில் அரசுப் பள்ளிகளைக் குறை கூறுபவர்கள் ஓருமுறையேனும் தான் படித்த பள்ளிக்குச் சென்று இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என எப்போதாவது நினைத்ததுண்டா? (என்னை இந்நிலைக்குத் தாழ்த்திய பள்ளிக்கு நான் எவ்வாறு செல்வது எனக் கருதவேண்டாம் – படித்தபோது இருந்த ஆசிரியர்கள் இன்று இல்லையே-அதனால் தாராளமாக செல்லலாம்-குறைந்தது உங்களைப் போல் பிற மாணவர்களும் ஏமாறுவதைத் தடுக்கவாவது செல்லலாம்) அவ்வாறு நினைத்து அப் பள்ளிக்கு அடிக்கடி சென்றிருந்தால் மிகுந்த உரிமையுடன் அங்கு நிலவும் குறைகளைச் சுட்டிக்காட்டி சரிசெய்யலாமே. அல்லது உண்மை உணர்வதற்காகவாவது ஒரு வாய்ப்புக் கிட்டும். பள்ளியின் புரவலர் திட்ட்த்தில் வெறும் ஆயிரம் ரூபாய் நன்கொடை தந்துவிட்டு அப்பள்ளியில் உரிமையுடன் சென்று பிரச்சனைகளைத் தீர்க்கலாமே. இன்னும் கூறப்போனால் பணமும் வள்ளல்தன்மையும் இருந்தால் ஒரு பள்ளியினையே தத்தெடுத்து அதைத் தலைகீழாக மாற்றும் சக்தி,குறைகூறும் நண்பர்களுக்கு வாய்ப்பாகக் காத்துள்ளது செய்வார்களா?

இதற்கு இரு உதாரணங்களை என்னால் காட்ட இயலும்.

நாமக்கல், கொக்கராயான்பேட்டை அரசுப் பள்ளியில் ஒரு காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையினால் வெறும் 120 மாணவர்களையும் மேல்நிலைத் தேர்வில் 30 சதவீத தேர்ச்சியையும் பெற்ற பள்ளி,2005க்குப் பிறகு ஆசிரியர்களின் முயற்சியால் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.பிறகு இன்றளவு வரை அப்பள்ளிக்கு வெற்றிமுகம்தான். இதைக் கண்ணுற்ற அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சென்னை பொன் பியூர் கெமிக்கல்ஸ் தலைவர் அவர்கள் அப்பள்ளியினைத் தத்தெடுத்துத் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பினை ஏற்படுத்தித் தந்து உதவியுள்ளார். தற்போது அப்பள்ளி மாவட்ட அளவில் முன்னோடிப் பள்ளியாகத் திகழ்கிறது.

இரண்டவதாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்ட்த்தில் தமிழக அளவில் தனியார்பள்ளிகள் கோலோச்சி வரும் இன்றைய சூழலில் ஆர்.புதுப்பாளையத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் 100% மிகச் சிறப்பான ஆங்கில வழிக் கல்வி நிலவுகிறது (அட்மிஷனுக்குப் பரிந்துரைக் கடிதம் கொண்டு வருமளவிற்கு நிலைமை உள்ளது). இதற்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, அப்பகுதியின் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பள்ளியின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகிறார்கள்.

நண்பர்களே, அனைத்துப் பள்ளிகளும் 100க்கு 100 மிகச் சரியாகச் செயல்படுகின்றன என்ற கருத்தினை முன் வைக்கவில்லை. ஆனால் 20 கி.மீ. சுற்றளவில் குறைந்தது 5 அரசுப் பள்ளிகளாவது இருக்கும். அதில் நிச்சயம் ஓரிரண்டு பள்ளிளாவது உறுதியாக நல்ல பள்ளியாக இருக்கும். அந்த நல்ல பள்ளியில் படிக்கவைத்துக் குறையுள்ள பள்ளியைப் புறக்கணியுங்கள். சேர்க்கை குறையும் போது நிச்சயம் தவறு செய்யும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் திருந்துவார்கள். (இல்லையென்றால் பள்ளியினையே இழுத்து மூடவேண்டி வருமே). முறையான வழியில் அப்பள்ளிகளின்/ ஆசிரியர்களின் குறைபாடுகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாகத் தீர்வு கிடைக்கும். இது ஆசிரியர்களைக் கடலில் கொண்டு தள்ளுவதைவிடச் சற்று சுளுவான வேலை.

குறைகூறுபவர்கள் களத்தில் நின்று குறைகளைச் சரி செய்யுங்கள். அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. இங்கு உங்களது மேலான அக்கறை மட்டுமே தேவைப்படுகிறது. படித்தவன் சூதும் வாது செய்தால் அய்யோ என்று போவான் என பாரதியார் ஒரு முறை அல்ல மூன்று முறை கூறுகிறார். ஆசிரியர் மட்டும் படித்தவனல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

இறுதியாக ஒரு சிறிய நையாண்டியுடன் முடித்துக் கொள்கிறேன்,

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் (கணித ஆசிரியர் உட்பட) தன் சம்பளத்தினைக் கூட எண்ணத்தெரியாது என்பதைத் தம்மம்பட்டி நண்பர் கண்டுபிடித்துவிட்டதால் இப்போது ATM மூலம் பணம் வழங்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த 1 ரூபாய் நாணயத் தட்டுப்பாடு நீங்கிவிட்டது. ஆனால் எனக்குத்தான் இன்னும் குழப்பம் உள்ளது.பணத்தை எண்ணத் தெரியாதவர்கள் வட்டித் தொழில் மிகச்சிறப்பாகச் செய்வதாக நண்பர் எப்படிக் கூறுகிறார் எனத் தெரியவில்லை (வட்டித் தொழில் செய்பவர்களுக்கு பிரெயிலி முறைகூடத் தெரியும். இருட்டில் கூடப் பணத்தை எண்ணும் ஆட்கள் அவர்கள்)

மிகுந்த அன்புடன்,

ந.மகேஷ்குமார்,

நாமக்கல்

பி-கு. அண்ணாச்சிக்கு (இவ்வாறு அழைக்கலாம்தானே), சென்ற கடிதத்தில் தங்களை மரியாதைக் குறைவாக நான் எழுதியதாக என் மனைவி வருத்தப்பட்டாள். என்னால் ஒரு போதும் அவ்வாறு தங்களுக்கு எதிராக மரியாதைக் குறைவாக எழுதமுடியாது எனவும், கருத்தினை விமர்சிப்பது தனிமனித அவமரியாதையல்ல என்றும் கூறினேன். மீண்டும் கூறுகிறேன்,தங்கள் மேல் கொண்ட மிகுந்த அன்பின் காரணமாகவே அப்போதும் இப்போதும் எழுதுகிறேன். வேறு ஒருகாரணமும் அல்ல.

மேலும் கடிதம் எழுதிக் கருத்துக்களை முன்வைத்தல், மற்றும் நுணுக்கமான செய்திகளைத் தேர்ந்தவர்களுக்கு மட்டும் புரியுமாறு எழுதுதல் ஆகியவற்றில் நான் ஒரு சதவீத தேர்ச்சி (இனி) பெற்றாலும் அதன் பெருமை நிச்சயம் தங்களையே சாரும். இதை உறுதிபடக் கூறுவேன்.

தீட்டிய மரத்தில் கூர் பார்த்த குற்ற உணர்வு சற்று உள்ளது. என்ன செய்வது,நமது பாரம்பரியம் அதுதானே.



அன்புள்ள மகேஷ்

மன்னிக்கவும் தாமதம். பயணங்கள் , எழுத்துவேலை

பரவாயில்லை, நீங்கள் கூர் பார்க்கலாம். அது மரியாதைக்குறைவெல்லாம் இல்லை, மறுப்புத்தானே?

உங்கள் எழுத்துக்களில் பிரச்சினை ஒன்றுமில்லை. உரைநடை கச்சிதமாகவும் நையாண்டி வெளிப்படுமிடங்களில் கூர்மையாகவும் உள்ளது. எதையுமே எழுதிப்பார்ப்பது நல்லது என்பது என் கருத்து. அது எண்ணங்களைச் சுருக்கமாக செறிவாக தர்க்கபூர்வமாக அமைக்க உதவும். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்

ஜெ

ஆசிரியர்கள் குறித்த ஜெயமோகன் அவர்களின் கட்டுரைக்கான எனது கடிதமும் அவரது பதிலும் - 1

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தங்களின் தீவிர வெறிநிலை கொண்ட வாசகன். அவ்வாறு கூறிக்கொள்வதில் பெருமையும் கொண்டவன். தங்களின் கட்டுரைகளை இணையத்தில் ஒன்றுவிடாமல் படித்துவருபவன். இந்நிலையில் தங்களின் ’ஒரு தற்கொலை’ என்ற தலைப்பில் ஜுன் 28இல் வெளியிடப்பட்ட கட்டுரையினைக் கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். பிறரைக் குறை கூறியபடி டீக்கடை பெஞ்சுகளில் செய்தித்தாள் வாசிப்பவன் ஒரு கருத்தினைக் கூறினால் அது எப்படி இருக்குமோ அவ்வாறே உங்கள் கட்டுரையும் இருந்தது. நீங்கள் அடிக்கடி கூறுவதுபோல் தங்களின் நேரடி அனுபவத்தினைத் தவிரப் புனைவாக ஒரு கருத்தினை வெளியிடமாட்டீர்கள் என்ற கருத்தினை ஐயம்கொள்ள வைத்துவிட்டது.

தாங்கள் குறிப்பிட்ட பனைமரத்துப்பட்டியில் சராசரி தேர்ச்சி விகிதம் பற்றித் தங்களுக்குத் தெரியுமா? அரசுப்பள்ளிகள் சரிவினைச் சந்தித்துவரும் காலத்தில் அப்படி ஒரு நல்ல சதவிகிதத்தினை அளிக்கப் பள்ளியின் ஆசிரியர்கள் வகுப்பறை நேரத்தினைத் தவிரவும் பாடுபட்டால் ஒழிய அப்படி ஒரு தேர்ச்சி சதவிகிதத்தினை நிகழ்த்திக் காட்ட இயலாது. இந்தச் சூழலில் படிப்பில் அக்கறையற்றும் , பிற மாணவர்களைத்தூண்டிவிட்டும் கெடுக்கும் மாணவர்களை எந்த வகையில் கையாளமுடியும். திட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் அது அவர்களின் முன்னேற்றத்திற்குத்தான் என்பதை அந்த மாணவனும் சரி, பெற்றோரும் சரி, தங்களைப் போன்றோரும் சரி ,துரதிருஷ்டவசமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதே உண்மை.

உங்கள் கட்டுரையில் உள்ளது போல் “…..வகுப்பு கூடுமான வரை வராமலிருக்க, வந்தாலும் எந்தப் பாடமும் நடத்தாமலிருக்க, முயல்பவர்கள் இந்தப் பொறுக்கிகள். அதை நியாயப்படுத்தும் இடதுசாரி தொழிற்சங்க அரசியலுக்குக் கப்பம் கட்டிவிட்டுத் தங்கள் பக்கவாட்டு வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள்.….” என்பதைப் படிக்கையில் உங்கள் அறியாமையே வெளிப்படுகிறது.

காரணம் இடது,வலது, மேல், கீழ் சாரிகளெல்லாம் தங்களின் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேண்டுமானால் கோலோச்சிக் கொண்டு இருக்கலாம். ஆனால் தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளில் அவர்களின் நடவடிக்கை என்ன என்பது தங்களுக்கே தெரியும். இதில் எங்கிருந்து யார் யாருக்குக் கப்பம் கட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆசிரிய குண்டர்கள் தொழிற்சங்க ரவுடிகளிடம் மாமூல் தருவது போன்ற காட்சிகள் நடிகர் டாக்டர் இளையதளபதி வருங்கால முதல்வர் விஜய் அவர்களின் டப்பிங் படத்தில் வருவதுபோல் உள்ளது.

மேலும் தற்போதைய கெடுபிடியான கல்வி அதிகாரிகள்,பெட்டிஷன் போடும் சக நண்பர்கள்,மற்றும் ஊரில் உள்ள ஆளுங்கட்சியினைச் சார்ந்த எட்டாவது பாஸும் பிறகு சமூக சேவையில் பின்னாளில் டாக்டர் பட்டமும் பெறும் தகுதியுடைய பெற்றோர் ஆசிரியப்பெருந்தகைகள் அவ்வாறு ஆசிரியர்களை மெத்தனமாக இருக்கவிடுவதில்லை. குறிப்பாக மேல் நிலை வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள்.

இதைவிடக் காமெடியான கருத்து,சென்ற தலைமுறை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இப்போது இல்லை என்று தாங்கள் கூறுவது. அதுவும் அதற்குக் காரணமாகத் ’தகுதிக்கு வேலை கொடுக்காமல் பணத்திற்கு வேலை தரும் கல்வித் துறையினை’ப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது,தங்களின் உச்ச கட்ட அறியாமையினையும், மேலும் யூகமாக உள்ளூணர்வின்படி கருத்துச் சொல்வது அனைத்தும் உண்மையாகவே இருக்கும் என்ற எண்ணத்தையுமே காட்டுகிறது.

டி.ஆர்.பி என்றழைக்கப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே ஆசிரியர்கள் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள். கவனிக்க! தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே முடிவானதாகக் கருதப்படுகிறது. இண்டர்வியூ போர்வையில் தகுதியற்றவர்களுக்கு இடமளிக்கும் செயல்பாடு இதில் இல்லை. மேலும் நாம் தேர்வில் எழுதிய பதில்களின் நகலும் தரப்படுகிறது பிறகு சரியான விடைகளும் இணையத்தில் வெளிவருகிறது. இதன் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வேலை தரப்படுகிறது. இதில் ஏதாவது ஐயம் இருப்பின் நீதிமன்றத்தினை அணுகலாம். எனவே இம்முறையில் முறைகேடு இல்லை. ஒரு பைசா செலவின்றி வேலை வாங்கலாம். (நான் 2002ல் இது போன்றே முதுகலை ஆசிரியர் தேர்வில் தாவரவியலில் முதலிடம் பெற்று ஆசிரியரானவன்-பணம் கொடுத்து அல்ல)

தாங்கள் குறிபிட்டது போல் பணம் கொடுத்து வேலை வாங்கலாம் என்ற நப்பாசையில் பணத்தினைப் பறிகொடுத்த பலரினை நான் அறிவேன். மேலும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள், புதிதாக அர்ப்பணிப்பு உணர்வுடன் வருபவர்களைப் ’புது வெளக்கமாறு கொஞ்சநாளைக்கு நல்லாக் கூட்டும்’ என்று நையாண்டி செய்வதை என் காதுபடக் கேட்டுள்ளேன்.

அரசுப்பள்ளிகளைப் படுமட்டமாகக் கருதும் நீங்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிபெண்கள் அரசுப் பள்ளி மாணவர்களாலேயே வாங்கப்படுகிறது என்ற உண்மையினை அறிவீர்களா?

பிறகு இந்த மாணவர்களை அப்படியே ஹைஜாக் செய்து சுய நிதிப் பள்ளிகள் +2வில் மார்க் வாங்க வைத்துவிடுகிறார்கள் (அங்கேயே 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அவ்வாறு சோபிப்பது இல்லை). ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் +2வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் சிலரின் தாயகம் அரசுப் பள்ளிதான் என்ற செய்தி நிச்சயம் தங்களுக்குப் புதுமையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்.

நீங்கள் கேட்கலாம் இவ்வளவு வீரப்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் +2விலும் சாதித்துக் காட்டலாமே என்று.ஆனால்,அரசுப் பள்ளிகளின் எல்லைகள் அவ்வாறு செயல்பட இடம் தருவதில்லை. உதாரணமாக +2 பாடத்தினை இரு வருடம் சுய நிதிப் பள்ளிகள் நடத்துகிறார்கள் அதாவது +1 பாடத்தினையே புறக்கணிப்பது. இதனைத் தனியார் பள்ளிகள் துணிச்சலாகச் செய்கிறார்கள் ஆனால் அரசுப்பள்ளிகளின் விதிகள் அவ்வாறு செய்ய இடம் தருவதில்லை. மீறி முயன்றால் சஸ்பென்ஷன், பெட்டிஷன் மற்றும் கல்வியாளர்களின் கடும் கவலைகளுக்கு ஆளாக நேரிடும்.

ஆனால் இதனையும் மீறி ஆண்டுப் பொது தேர்வு விடுமுறைகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் சிறப்பு வகுப்பு (டியூஷன் அல்ல) நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் எந்தவித வசூலும் மாமூலும் வாங்காமல் விடுமுறையினை அனுபவிக்காமல் பாடம் நடத்துகிறார்கள் (இது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. சந்தேகமிருப்பின் ஏதேனும் அரசு மேல் நிலைப் பள்ளியினை அணுகித் தெரிந்து கொள்க). இதில் கொடுமை என்ன்வென்றால் யாருக்காக நட்த்துகிறோமோ அந்த மாணவர்கள் அப்போது வருவதில்லை (பிறகு திட்டாமல் கொஞ்சவா முடியும் – ஒருவேளை கோவக்கார(?!) ஜெயமோகன் அண்ணன் ஆசிரியரானால் முடியுமோ என்னவோ).

ஆசிரியர்களின் மறைமுக அதிகாரம் பற்றிக் கூறியுள்ளீர்கள். அதாவது எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் வாக்குகளையே மாற்றும் சர்வக்ஞராக ஆசிரியப்பெருமக்கள் திகழ்கிறார்கள் என. என்னே தங்களின் கண்டுபிடிப்பு. எலக்‌ஷன் கமிஷன் தங்களிடம் விளக்கம் கேட்டால்தான் சரிவரும் போல.

பூத்தில் வேலை செய்யும் ஆசிரியர்கள் திருட்டுத்தனமாகக் கழ(ல)கத் தொண்டர்களை மீறி எப்படி ஓட்டுப்போடமுடியும் என்பதை விளக்கமுடியுமா? குறைந்தபட்சம் தேர்தலில் (எலக்ட்ரானிக்) பணியாற்றிய அனுபவம் தங்களுக்கு உண்டா? அப்படி இல்லையெனில் அந்த அனுபவம் இல்லாத தாங்கள் எவ்வாறு கண்மூடித்தனமாகக் கருத்துக்கூற இயலும்.

தேர்தல் கமிஷன் விட்ட சவாலில் கலந்து கொள்ளாமல் ஜகா வாங்கிய கட்சிகளாலேயே நிரூபிக்க இயலாததை தாங்கள் எப்படி நிருபிப்பீர்கள் எனத் தெரியவில்லை.

நான் 3 எலக்ட்ரானிக் தேர்தல்களில்,வாக்குச்சாவடி அலுவலராக இருந்தவன் என்ற முறையில் தாங்கள் குறிப்பிடும் மோசடிகளைச் செய்ய இயலாது என அனுபவபூர்வமாக உணர்ந்தவன். ஒரே ஒரு மோசடிக்கான வாய்ப்பு மட்டும் உள்ளது. அது வயதானவர்களை அலுவலரே அழைத்துப் போய் அவருக்குப் பதிலாக அலுவலரே ஓட்டுப் போடுவது. ஆனால் இதைச் செய்வதற்கு வாக்குச் சாவடி ஏஜண்டுகள் மடையர்களாக இருக்க வேண்டும்.

ஆனால் உலகத்தில் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் அவ்வளவு மடையர்களாக இருப்பதில்லை. சமுதாயத்தில் அவன் ‘ வாத்தியானாக’ அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறான். தன் சொந்த மாணவர்களால் பட்டப்பெயர் வைக்கப்பட்டு, அதுவே ஆசிரியையாக இருந்தால் அந்தப் பெயர் கெட்டவார்த்தையுடன் சேர்க்கப்பட்டுப் பள்ளிக் கழிப்பறைகளிலெல்லாம் பறை சாற்றிக் கொண்டிருக்கும். தண்ணியடித்து விட்டுப் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கண்டிக்கக் கூட அதிகாரமற்றவன். அப்படிக் கண்டித்தால் “ தருமபுரி அருகே குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்த மாணவனைக் கண்டித்த ஆசிரியருக்கு அடி உதை” என்று தினத்தந்தியில் செய்தியினைப் பார்த்திருக்கமாட்டோம். நான் பணியாற்றிய பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 8ஆம் வகுப்பு படிக்கும் பீடி குடித்த மாணவனைக் கண்டித்து அனுப்பிய அடுத்தநாள் அவனின் அம்மா பிரேயர் நடக்கும்போது கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தது நினைவில் உள்ளது. மேலும் அவள் தன் கையைப்பிடித்து இழுத்த்தாக ஆசிரியரை மிரட்டியதையும் மறக்கமுடியாதது.(தேவையெனில் இதை ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்)

ஏன் என் சொந்த அனுபவத்தில் 2002ல் நான் பணியாற்றிய பள்ளியில் நான் தினமும் 8.30 மணிக்கு மாணவர்களை வரச்சொல்லித் தேர்வு எழுத வைத்த ஒரே காரணத்திற்காக ஒரு மாணவன் நான் அவனின் ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக அபாண்டமாகப் பழிகூறினான், காலனியிலிருந்து ஒரு கூட்டத்தினையே கூட்டி வந்தான். நல்ல வேளை அதே பள்ளியில் இருந்த என் அன்பிற்குரிய தமிழய்யா (அதே காலனியில் வசிப்பவர்) அவர்களும் பிற மாணவர்களும் என் இயல்பினைக் கூறிக் கூட்டத்தினை விரட்டி அடித்தனர்.(பிறகு அதே மாணவனுக்குப் பிராக்டிகலில் 50க்கு 50 போட்டபோது அவன் என் காலில் விழுந்தது தனிக்கதை). ஆனால் இச்சம்பவம் ஒரு வித அச்சத்தினையும் பாடம் நடத்துவதற்கே வெறுப்பினையும் ஏற்படுத்தியது. தமிழய்யா மட்டும் அன்று இல்லை என்றால் என் பெயர் தினத்தந்தியில் அன்றே நாறியிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால் அந்த மாணவன் கூட்டி வந்த கூட்டத்தில் பாதிப்பேர் அதற்கு முந்தைய ஆண்டுகளில் என்னிடம் படித்த மாணவர்கள். இதுதான் ஓர் உண்மையான ஆசிரியனுக்கு இறுதியில் கிடைக்கும் பரிசு என அன்று தெளிந்து நொந்து கொண்டேன். பொதுமக்களிடையே இப்போதும் சரி கடந்த காலத்திலும் சரி ஏன் மன்னர்கள் காலத்தில்கூட மரியாதை கிடைத்ததில்லை. அதனால் நீங்கள் இதைவிட மகாகேவலமாக எழுதினாலும் எதிர்க்கத் தெம்பும்,திராணியும் அற்றவர்கள்தான் ஆசிரியர்கள்.

தனியார் பள்ளியையும் அரசுப்பள்ளியையும் என்றைக்குமே ஒன்றாகவைத்து ஒப்பீட்டு ஆய்வு செய்யமுடியாது. காரணம்,

1. 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்தினை இரு வருடம் தனியார் பள்ளிகள் நடத்தலாம். ஆனால் அரசுப்பள்ளிகளால் அது முடியவே முடியாது (அரசுப் பள்ளியில் பாடமே நட்த்துறது இல்லை,இதுல எங்க 2 வருசப் பாடம் எனத் தாங்கள் நக்கலடிக்கலாம்)

2. தனியார் பள்ளிகள் பாடத்தினை விளக்குவதில்லை.பதிலாக அதனை வரிவரியாக ( தங்கள் மகன் தங்களிடம் குறிப்பிட்டது போல்) மாணவர்களின் மனதில் பதியவைக்கவும் அவ்வாறு பதியவைத்ததைத் தாளுக்கு மாற்றும் வித்தையினையும் கற்றுத் தருகின்றனர். அரசுப் பள்ளிகள் அவ்வாறு நினைத்த நேரத்தில் தேர்வுகள் வைக்கமுடியாது. ஏனெனில் கற்றல்- கற்பித்தலுக்கு மட்டுமே பாடவேளைகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் விதி. இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள்,காலை 8.30 மணிக்கு மாணவர்களை வரவழைத்துத் தேர்வினை நடத்துகின்றனர் இதே போன்று மாலை பள்ளி முடிந்தவுடன் 10, 12 வகுப்பு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நான் கூறுவது எங்கள் பகுதிக்கு மட்டுமன்று. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.

இது புருடா அல்ல. தாங்களே நேரடியாகத் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாலை வேளைகளில் சென்று இதனை உறுதிப்படுத்தலாம். அப்படி வகுப்பு நடைபெறவில்லை எனில் முதன்மைக் கல்வி அலுவலரைத் தொடர்பும் கொள்ளலாம்.

3. தனியார் பள்ளிகளின் வேலை நேரம் 24மனி நேரம்.ஆனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைக் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கட்டுப்படுத்த இயலும். மாலையில் படிக்கவைப்பது பெற்றோரின் கடமை.

ஆனால் தேர்வு நேரத்தில் 10,12 ஆம் வகுப்பு மாணவர்களை அரசுப் பள்ளிகள் சிலவற்றில் தங்கவைத்து பெ.ஆ.கழகத்தின் உதவியுடன் மாலைச் சிற்றுண்டி ,இரவு உணவு ஆகியவற்றினை அளித்து ஒரு ஆசிரியரின் மேற்பார்வையுடன் ( அதற்கு அவருக்கு ஏதும் பணம் அளிப்பது இல்லை. முற்றிலும் சேவை நோக்கம் மட்டுமே) மாணவர்கள் படிக்கவைக்கப்படுகின்றனர். எதிர்வரும் பிப்ரவரி, மே மாதங்களில் நாமக்கல் வாருங்கள்.நானே அழைத்துச் சென்று காண்பிக்கின்றேன்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களை எளிதாகக் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பு,அரசிடம் உள்ளது ( தாங்கள் தவறாகக் குறிப்பிடுவது போல் தனியார் பள்ளி ஆசிரியர்களைத்தான் கட்டுப்படுத்த இயலாது. திறமையான மேல் நிலைத் தனியார் ஆசிரியர் மாதம் 50 ஆயிரம் சம்பாதிப்பது மட்டுமன்றி ஒரு பள்ளி பிடிக்கவில்லை என்றால் எளிதாக அடுத்த பள்ளிக்கு மாறலாம். 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது ஏதேனும் தவறு அவர்களால் நேர்ந்தால் கூட அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இதே அரசுப் பள்ளி ஆசிரியர் என்றால் தண்டனைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்) இதை மீறி எந்த ஆசிரியரும் நடந்து கொள்ளமுடியாது என்பதே உண்மை.

பிரச்சனை,நமது கல்வியமைப்பில் உள்ளது. தன்னம்பிக்கையினையும் இலட்சியத்தினையும் வலியுறுத்தாத கல்வியால்தான் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்கின்றன. இறந்த மாணவன் எதிர்பார்க்கும் கல்வியினைத் தற்போதைய சூழலில் நம்மால் தர இயலாது. இதற்கு ஆசிரியர்கள் என்ன செய்ய இயலும். ( ஆனால் தற்போது பெரும்பான்மையான பள்ளிகளில் இது போன்ற மாணவர்களை ஒன்றும் சொல்வதும் இல்லை. அவர்களைப் படிக்கச் செய்வது, ரெக்கார்ட் வரையச் சொல்வது போன்ற எந்தப் பணியினையும் ஆசிரியர்கள் தருவதில்லை – நமக்கேன் வம்பு என இருந்து விடுகிறார்கள் – அந்த மாணவனை ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள் – அவன் இஷ்டம் போல் பள்ளி வந்து செல்லலாம் _ இதைச் சொல்வதற்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது – என்ன செய்வது காலம் அப்படி உள்ளது – எந்த ஆசிரியன்,களி தின்பதற்கும் பேப்பரில் குடும்பத்துடன் அவமானப்படவும் விரும்புவான் – மேலும் முன் ஜாமீன் போன்ற சமாச்சாரங்கள் அவன் கேள்விப்படாதவை). ஒரு பிரச்சினை என வரும் போது சம்பந்தப்பட்ட ஆசிரியனுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. ஒன்றாகப் பணியாற்றும் ஆசிரியர்கூடக் கண்டுகொள்வதில்லை. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் சங்கம் தவிர்த்துப் பிற ஆசிரியர்களுக்கான சங்கங்கள் பெரிதாக ஒன்றும் சாதிக்க இயலாத ஒற்றுமையின்மையே இங்கு நிலவுகிறது. பிறகு எங்கு தாங்கள் தொழிற்சங்கம் போன்ற ஒற்றுமையைக் கண்டீர்கள் என தெரியவில்லை. இவ்வளவு ஏன்?ஒரு மாணவன் இறந்தால் அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மந்திரிகள், மீடியா எனப் புடைசூழ வருபவர்கள் – 50 ஆண்டுகள் பணியாற்றிய ஓர் ஆசிரியன் இறக்கும்போது ஒரு நாய்கூட வருவதில்லை என்ற வேதனையான உண்மையினை உணர்வீர்களா?

மேலும் தாங்கள் சிலாகிக்கும் தனியார் பள்ளிகளில் ஓவ்வொரு ஆண்டும் வெளியில் தெரியாமல் எத்தனை தற்கொலைகள் நடக்கின்றன என விசாரித்துப் பாருங்கள். நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். மிகத் திறமையாகப் படிக்கும் இயல்புடைய அந்த மாணவர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் – அரசுப் பள்ளியின் நிலையினை என்னவென்பது?

இறுதியாக எதையும் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல் ஆதாரத்துடன் எழுதுமாறு தங்களை வேண்டுகிறேன். குறிப்பாக ஆசிரியர்களைப் பற்றித் தவறாகப் படத்தில்கூடச் சித்தரிக்கக் கூடாது எனும் சில நாட்டினரின் சிந்தனைப் பின்னணி பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அதில் எக்காரணம் கொண்டும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் ஆசிரியரைப் பற்றி துளி அளவு கூட தவறான எண்ணம் ஏற்படக்கூடாது என்ற அக்கறையினை உணர்வீர்கள்.

ஆசிரியர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு நல்லவர்கள் என வாதிடுவது என் நோக்கமல்ல. புல்லுருவிகள் எங்கும் இருப்பவர்கள். யானை வாழும் காட்டில்தான் எறும்புகளும் வாழ்கின்றன. அவை கண்னுக்குத் தெரிவதில்லை. அறம் எழுதியவருக்கு நான் என்ன புதிதாகக் கூற முடியும்?

நீண்ட கடிதமாக அமைந்துவிட்டதற்குப் பொறுத்தருள வேண்டுகிறேன். தங்கள் மேல் கொண்ட அன்பினால் மட்டுமே நான் இவ்வளவு பெரிய கடிதம் எழுத நேர்ந்தது. வெறுப்பால் அல்ல. தங்களின் விலைமதிப்பற்ற நேரம் வீணாகி இருக்காது என நம்புகிறேன்.

மிகுந்த அன்புடன்

ந.மகேஷ்குமார்

நாமக்கல்



அன்புள்ள மகேஷ் குமார்,

நன்றி.அக்கட்டுரை ஓர் எதிர்வினை. அந்தத் தற்கொலையில் இருந்த கற்பனைக்கெட்டாத கையறுநிலை, அந்த நிலைக்கு ஆதரவாக ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போட முடியாத நம்முடைய அரசும் கல்வித்துறையும், அதற்கு எதிராக வெறும் அரசியலாக மட்டுமே அதைக் கண்டு ஆற்றப்பட்ட ஓர் எதிர்வினை ஆகியவை இணைந்து அந்த ஆழமான மனக்கசப்பையும் கொந்தளிப்பையும் உருவாக்கின.

கீழ்க்கண்ட பதிவை நான் 2003 ல் மரத்தடி இணையதளத்தில் ஒரு கேள்விக்குப் பதிலாக அளித்திருந்தேன்.

பள்ளிநாள்களிலேயே என்னை மிகவும் தூண்டிய முன்னுதாரண ஆசிரியர்கள் பலர் உண்டு. ஓய்வுபெற்றுவிட்ட சத்தியநேசன் அவர்களைச் சமீபத்தில் தெருவில் பார்த்தேன். ஆற்றூர் ரவிவர்மா ஆசிரியர்தான். அத்தொழிலில் உள்ள மோகம் காரணமாக இந்தத் தள்ளாத வயதிலும் அவர் தனியார்பள்ளிக்குக் கற்பிக்கச் செல்கிறார். அவரது மாணவர்கள் கேரள இலக்கிய இதழியல் துறைகளில் சாதனை செய்தனர். அவர்கள் நினைவில் அவர் அப்பழுக்கற்ற ஒரு பேராசான். எம்.வேதசகாயகுமார் ஓர் ஆசிரியராக எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் உழைப்பும் பலசமயம் என்னைப் பிரமிக்கவைத்துள்ளன.

என் மாமனார் [அருண்மொழிநங்கையின் அப்பா] எஸ்.சற்குணம் அவர்கள் ஆசிரியராக நாற்பதுவருடம் முற்றிலும் அர்ப்பண உணர்வுடன் பணியாற்றியவர். தனிவாழ்க்கையிலும் திராவிட இயக்கப் பிடிப்புள்ள பொதுப்போராளியாக முன்னுதாரணமாக இருந்தவர். தன் குடும்பத்தில் உள்ள அத்தனை எளியவர்களுக்கும் நிழல் அவர். கடற்கரையோர ஆரம்பப் பள்ளி ஆசிரியயையாக இருந்த அருண்மொழியின் அம்மா தினம் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்து பைநிறைய பூப்பறித்துக் கொண்டுசெல்லும் காட்சி என் மனதில் நிற்கிறது. என் நண்பரும் இலக்கிய வாசகருமான தங்கமணி [மொரப்பூர்] தன் பள்ளிக்கு ஆற்றும் உழைப்புக்கும் மாணவர்கள்மீது கொண்டுள்ள பற்றுக்கும் சமானமாக அதிகமான விஷயங்களைச் சொல்லிவிட இயலாது. நான் பட்டியலைப் போட்டுக் கொண்டே போகமுடியும்

ஆசிரியர்களில் மகத்தான மனிதர்கள் இன்றும் ஏராளமாக உள்ளனர். அருண்மொழியின் சக ஊழியையான மீனா என்பவரின் கணவரான ஆசிரியரைச் சென்றவாரம் இரவு எட்டுமணிக்குப் பேருந்தில் பார்த்தேன். ஏன் இவ்வளவு நேரமாயிற்று என்றேன். வேலைபார்ப்பது மிகச்சிறிய கிராமத்தில். அங்கே பையன்களுக்குக் கணக்கும் ஆங்கிலமும் ஏறவே ஏறாது, பத்தாவது தேர்வு வருகிறதல்லவா, ஆகவே நாங்கள் மூன்றுபேர் உபரிவகுப்பு நடத்துகிறோம் என்றார். பணம் தருவார்களா என்றேன். நல்ல கதை, கைக்காசுப்போட்டு டீ வாங்கித்தரவேண்டும், அவ்வளவு ஏழைப் பையன்கள் என்றார். காட்டுக்கத்தலாகக் கத்திப் பிரம்பால் விளாசி, டென்ஷன் ஏறி ராத்திரி தலைவலி வருகிறது என்று புலம்பினார். இன்றும் தமிழ்நாட்டில் பல அரசுப்பள்ளிகள் மிகச்சிறந்தசேவை ஆற்றிவருகின்றன என்பதை ஒவ்வொரு தேர்வுமுடிவுகளும் காட்டுகின்றன, இந்தப் பத்தாம்வகுப்பு முடிவுகளும். கிராமத்துப் பள்ளியில் நூறு பிற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்பில் கத்திக் கத்தி அவர்களில் முக்கால்பங்கினரை வெல்லவைக்கும் அந்த ஆசிரியர்களைப் போகிறபோக்கில் சீரழிந்த கும்பல் என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

அந்த நம்பிக்கையில்தான் நான் என் மகனை அரசுப்பள்ளியில் சேர்த்தேன். தனியார்பள்ளிகளின் சிறைக்கொடுமைகள் அங்கே இருக்காது, நான் சந்தித்ததுபோல ஒருசில ஆசிரியர்களையாவது அவன் அங்கே சந்திக்க முடியும், அவர்கள் மேல் அவன் மரியாதையும் ஈர்ப்பும் கொள்ளமுடியும் என நினைத்தேன்.



ஆனால் 2004ல் அவனை நான்ந் ஆகர்க்கோயில் அரசுப்பள்ளி ஒன்றில் சேர்த்தது முதல் மெல்லமெல்ல என் நம்பிக்கைகள் சிதைந்தன. நான் கண்ட அந்த ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள்– ஆகவே ஏதோ ஒருவகையில் இலட்சியவாத நோக்குள்ளவர்கள். அவர்கள் மிகமிக குறைவானவர்களே. எஞ்சிய ஆகப்பெரும்பான்மைக்கு கற்பிப்பதில் மயிரிழை அளவும் ஆர்வமில்லை. நான் மீண்டும் மீண்டும் பள்ளிக்குச் சென்று மீண்டும் மீண்டும் வாதிட்டு தொடர்ந்து அவமானப்பட்டு கண்டுகொண்ட உண்மை இது

அன்புள்ள மகேஷ், நான் ஆய்வுக்கட்டுரை எழுதவில்லை. அனுபவத்தைச் சொல்கிறேன். ஆகவே விவாதங்களில் நான் பதிவு யந்திரத்தை பதுக்கி எடுத்துச்செல்லவில்லை. நான் உண்மை சொல்லவில்லை என நீங்கள் நினைத்தால் இதை முழுமையாக தவிர்த்துவிடலாம், அவ்வளவுதான்

நீங்கள் சொன்னதுபோல ஆத்மார்த்தமாக கற்பிக்கும் ஒரு ஆசிரியரைக்கூட என் மகன் அவனுடைய பள்ளி நாளில் சந்தித்ததில்லை. சுப்புலட்சுமி என்ற தற்காலிக ஆசிரியரைத்தவிர. பெற்றோர் ஆசிரியர் கழக சம்பளம் வாங்கிய அவரும் வேலை இழந்து தனியார்பள்ளிக்குச் சென்றுவிட்டார். என் மகனை நான் மிக மதிப்பவன். அவனுடைய அடிப்படை நியாய உணர்வை, கருணையை, என்னைப்போலன்றி எப்போதுமே நிதானத்துடன் இருப்பதை ஆச்சரியத்துடன் பார்ப்பவன். அவனிடம் அடிப்படை மரியாதையை ஈட்டிய ஒரே ஒரு ஆசிரியர் கூட இல்லை என்பது அவனுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்ன்ன என்பதை எனக்கு காட்டுகிறது. எவ்வளவு பெரிய ஒரு தனிப்பட்ட இழப்பு அது!

ஆறு வருடம் அரசுப்பள்ளிகளுக்குச் சென்றேன். நான் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன். அரசுப்பள்ளிகளில் விதிவிலக்காக சிலர் தவிர எவருமே மாணவர்கள் மேல் அக்கறை கொண்டு சொல்லிக்கொடுப்பதில்லை. எல்லாவற்றையுமே ஒப்புக்கு தான் செய்கிறார்கள். அவர்களை நம்பி எந்த மாணவரும் தேர்வுகளைச் சந்திக்கமுடியாது. இதுவே நான் கண்ட உண்மை. நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன், ஆனால் நான் பார்த்ததெல்லாம் நேர் எதிராக.

தேதல்களில் ஆசிரியர்கள் பல மோசடிகளைச் செய்ய முடியுமென நான் விரிவாகவே பேசமுடியும். தொழிற்சங்க சார்பில் தேர்தல் வேலைகளில் சம்பந்தப்பட்டபோது சாதாரணமாக நானே நேரில் சென்று கண்டிருக்கிறேன். சண்டைகள் போட்டிருக்கிறேன். மலைக்கிராமங்களிலும் சிற்றூர்களிலும் கள்ளஓட்டு நாடகங்களுக்கு ஆசிரியர்களே முழுமுதல் நடிகர்கள். இன்று தேர்தல் கமிஷனுக்கு அஞ்சி அவர்கள் சும்மா இருக்கிறார்கள். அரசு ஆசிரியர் வேலைவாய்ப்புகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு வெளியே கணிசமான வாய்ப்புகள் லஞ்ச அடிபப்டையிலேயே செய்யபப்டுகின்றன. அதையும் நானே கண்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு உயர்தர ஓட்டலின் முகப்பில் இருக்கையில் ஏற்பாடு செய்பவர்களிடம் பேசியும் இருக்கிறேன். உங்கள் நம்பிக்கைகள் வாழ்க.

கடைசியாக, கப்பம். தெளிவாகவே கேட்கிறேனே. மாணவிகளிடம் செக்ஸ் வைத்துக்கொண்ட ஆசிரியர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். என்ன தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது? அதிகபட்சம் இடம் மாற்றம். ஏன்? அதுதான் தொழிற்சங்க அரசியல். இடதுசாரிகள் இல்லாமலிருக்கலாம், வலதுசாரிகள் இருக்கலாம். ஆனால் எவரும் எதற்காகவும் தண்டிக்கப்பட முடியாது. அதற்கு அளிக்கப்படும் கப்பமே சந்தாப்பணம், போனஸ் முதலிய வற்றின்போது அளிக்கப்படும் நன்கொடைகள். அதை விஜய் படங்களில் நீங்கள் பார்க்கமுடியாது.

நான் பொதுமைப்படுத்துகிறேன். ஆனால் ஒரு நீண்டகால அனுபவத்தொடரின் விளைவான மனப்பதிவை அப்படித்தான் பொதுமைப்படுத்திச் சொல்லமுடியும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வருந்தத்தக்கவை. ஆனால் அவை ஏன் என சிந்தித்துப்பாருங்கள். இன்று இதே நிலை டாக்டர்களுக்கும் உள்ளது. ஒரு பிரச்சினை என்றால் டாக்டரை அடிக்க பாய்கிறார்கள் மக்கள். ஏன்? சென்ற தலைமுறை ஆசிரியர்கள், மருத்துவர்கள் எப்படி மதிக்கப்பட்டார்கள். இன்று என்ன ஆயிற்று? ஒட்டுமொத்தமாக நம் மக்களுக்கு ஆசிரியர்கள் மேல் மதிப்பு இல்லை. மருத்துவர்கள் மேல் மதிப்பு இல்லை. சோம்பெறிகள் கொள்ளையர்கள் என்ற மனப்பதிவே உள்ளது. அந்த மனப்பதிவை உருவாக்கும் பெரும்பான்மையினரே சிறுபான்மையினருக்கும் அவமரியாதையை தேடித்தருகிறார்கள்

மீண்டும் சொல்கிறேன். எனக்கு தெரியும், நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என. நல்ல மருத்துவர்கள் பலர் நெருக்கமான நண்பர்கள். ஆனால் ஒரு தொழில்வற்கம் என்ற முறையில் இவ்விருவர் மேல் எந்த அடிப்படை மதிப்பும் எனக்கும் இல்லை. நான் பொதுமக்களில் ஒருவன் மட்டுமே. எதிலும் நிபுணன் அல்ல.

ஜெ